'யாருக்கும் பாரமா இருக்கமாட்டேன்...' 'வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்ட ஆசிரியர்...' 'டவர் சிக்னல் காட்டிய இடம் காடு...' - போய் பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை நடனப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகர் பகுதியில் வாழ்ந்து வருபவர் காண்டீபன். இவர்
தீயணைப்பு துறையிலும் அவரின் மனைவி புவனேஸ்வரி (வயது 32) தேவகோட்டை அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் புவனேஸ்வரி தேவகோட்டையில் சொந்தமாக நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஆசிரியரான திருமதி.புவனேஸ்வரி இன்று அவருடைய செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 'இதுவரை எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய எல்லோருக்கும் நன்றி. நான் இனிமேல் யாருக்கும் பாரமாக இருக்கப் போவதில்லை' என சூசகமாக வைத்துள்ளார்.
ஆசிரியரின் பதிவில் ஏதோ சரி இல்லை என நினைத்த அவரது நடனப்பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியர் புவனேஸ்வரியின் கணவரிடம் கூறியுள்ளார்.
தகவலையறிந்த ஆசிரியரின் கணவர் காண்டீபன் தன் மனைவியின் செல்போன் நம்பருக்கு அழைத்துள்ளார். ஆனால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே உடனடியாக காண்டிபன் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என்று புகார் மனு அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படைப்படையில் தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர், புவனேஸ்வரின் செல்போன் டவர் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்துள்ளனர்.
அதையடுத்து டவர் காட்டும் பகுதியில் சென்று தேடுகையில் காரைக்குடி திருச்சி பைபாஸ் சாலையில் புவனேஸ்வரி பயன்படுத்தும் இருசக்கர வாகனம் இருந்ததை கண்டனர். பின்பு காவல் துணை கண்காணிப்பாளர் அருண் தலைமையிலான காவல்துறையினர் சாலையின் இருபுறமும் உள்ள காட்டுப்பகுதியில் தேடினர்.
அனைவரையும் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆசிரியர் புவனேஸ்வரியின் சடலம் ஒரு மரத்தில் தொங்கியுள்ளது. புவனேஸ்வரியின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மர்ம மரணம் தொடர்பாக தீவிர விசாரணையை முடுக்கி விடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.