‘கொரோனா நேரத்துல இதுவேற நடக்குதா’!.. அமேசான் காட்டில் ‘மின்னல்’ வேகத்தில் நடக்கும் கொடுமை..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரொனா சமயத்தை பயன்படுத்தி அமேசானில் காடு அழிப்பு வேகமாக நடைபெறுவதாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை கொரோனாவால் பீதியடைந்துள்ளன. இதுவரை கொரோனா வைரஸ் தாக்கி 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்த சூழ்நிலையில் சத்தமில்லாமல் அமேசானில் காடு அழிப்பு நடந்து வருகிறது. அமேசான் காடுகளை உலகத்தின் நுரையீரல் என்று அழைப்பதுண்டு. புவிக்கு தேவையான ஆக்சிஜனில் 20%க்கும் மேல் அமேசான் காடுகளால் கிடைக்கிறது என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 9 நாடுகளில் பரந்த விரிந்திருக்கும் அமேசான் காடுகளின் பெரும்பகுதி பிரேசிலில் உள்ளன.
இந்த நிலையில் கொரோனா சமயத்தை பயன்படுத்தி அமேசானில் காடு அழிப்பு அதிவேகமாக நடைபெறுவதாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 64% காடழிப்பு அரேங்கேறியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த வருடம் ஏப்ரலில் 248 சதுர கிமீ அளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டன.
இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் சட்டவிரோதமாக காடழிப்பு 55% அதிகரித்துள்ளதாகவும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 1202 சதுர கிமீ அளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுக்கிறது. இந்த சட்டவிரோத நடவடிக்கையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. மனிதர்களால் ஏற்படும் காடழிப்பு என்பது வனம் அழிவு மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த பூமிக்குமே பாதிப்பை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
