கல்யாண வீடா? லட்சுமி ஸ்டோர்ஸா? டி.வி. சீரியலை வைத்து பிரச்சாரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 05, 2019 03:03 PM

தொலைக்காட்சியில் வரும் கல்யாண வீடு, ல‌ட்சுமி ஸ்டோர்ஸ், 'இதில் எந்த சீரியல் பாக்குறீங்க' என்று டி.வி. சீரியலை வைத்து பிரச்சாரம் செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது.

sivagangai candidate karthi makes a campaign talking about tv serials

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  தேர்தல் நேர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினரிடையே நிகழும் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமிருக்காது.

இந்நிலையில், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் நேற்று தேவகோட்டையில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய கார்த்தி சிதம்பரம் பொதுமக்களைப் பார்த்து, 'செம்பருத்தி, கல்யாண வீடு, லட்சுமி ஸ்டோர்ஸ்' இதில், 'உங்களுக்கு எந்த சீரியல் ரொம்ப பிடிக்கும்?' என்று கேட்டு பொதுமக்களை கலகலப்பூட்டினார்.

அதற்குக் கூட்டத்தில் இருந்த பெண்கள் 'செம்பருத்தி சீரியல்' என்று பதிலளிக்க, 'எனக்கு பெரிய சந்தேகம்?' என்ற கார்த்தி சிதம்பரம், 'நீங்க எல்லாம் அந்த சீரியல் ஹீரோயின் பார்வதி பக்கமா அல்லது வனஜா பக்கமா' என்று கேட்க, அதற்குப் பெண்கள், நாங்கள் 'பார்வதி பக்கம்' என்று பதிலளித்தனர்.

'நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு மாலையில் தொலைக்காட்சி பார்க்கும் பெண்களுக்கு கேபிள் கட்டணம் 400 ரூபாய் வரை செலுத்துவது மிகவும் சிரமம், அதனால் நாங்கள் வெற்றி பெற்றால் கேபிள் கட்டணத்தை 100 ரூபாயாக குறைத்துவிடுவோம்' என வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் உத்தரவாதம் அளித்தார். இதற்குக் கூட்டத்தில் இருந்த பெண்கள் கைகளைத் தட்டி வரவேற்பு அளித்தனர்.

Tags : #KARTHICHIDAMBARAM #CAMPAIGN #SIVAGANGAI #TVSERIALS #KALYANAVEEDU #LAKSHMISTORES #CONGRESS