'உங்களோட விளம்பரத்துக்கு பல கோடி' ...ஆனா 'பெண் குழந்தைக்கு 5 பைசாவா'?...அப்சரா ரெட்டி காட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Feb 23, 2019 04:24 PM
சமீபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளிவந்துள்ளன.இதில் 40% பெண் குழந்தைகள் 11-15 வயதிற்குள் குழந்தை திருமணத்திற்கு உட்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.இதற்கு ஆய்வில் பங்குபெற்ற 82% பேர் முன்வைப்பது வறுமை மற்றும் போதிய கல்வி பெறுவதற்கான சூழ்நிலை இல்லாததே முக்கியமான காரணம் என தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த,அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவு பொது செயலாளர் அப்சரா ரெட்டி '' இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் அதிர்ச்சியான ஒன்றாகும்.எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தங்களின் அரசியல் சுய லாபங்களுக்கு முன்னுரிமை அளித்து விட்டு,மிகவும் முக்கியமான குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களின் அடிப்படை கல்விக்கான எந்த முயற்சியிலும் முன்னேற்றம் காட்டவில்லை.
முறையான சுகாதாரம்,கற்பகாலங்களில் பெண்களுக்கு தேவையான ஆலோசனை போன்றவைகள் கீழ்நிலையில் வாழும் பெண்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை.சிறு வயதிலேயே திருமணம் முடிக்கப்படும் பெண் குழந்தைகள்,குழந்தை பிறப்பு மற்றும் கருக்கலைப்பு என பல்வேறு இன்னல்களுக்கு உட்படுகிறார்கள்.இந்த பிரச்சனைகளை தமிழக சுகாதார துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை விரைவாக கவனிக்க வேண்டும்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் ''தமிழகத்தில் நடைபெறும் குழந்தை திருமணங்களுக்கு நாம் அவர்களின் பெற்றோரை மட்டும் குறை கூறுவது நல்லதல்ல.எந்த பெற்றோரும் தனது குழந்தைகளை விற்பது இல்லை.போதிய படிப்பறிவு இன்மை மற்றும் பொருளாதார சூழ்நிலைகள்,தங்களின் பெண் குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே திருமணம் முடித்து வைக்க காரணமாக அமைந்து விடுகிறது.இதற்கு ஒரே தீர்வு முறையான கல்வியினை அளிப்பது மட்டுமே.
பதின் பருவத்தில் ஒரு பெண் குழந்தை கற்பமடைவது என்பது சாதாரணமாக எடுத்து கொள்ள கூடிய விஷயம் அல்ல.மத்திய மாநில அரசுகள் தங்களின் அரசியல் லாபங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்று,பெண் குழந்தைகளின் நலனிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.பட்ஜெட்டில் 56 சதவீதம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள செலவு செய்யும் மோடி அரசு ,ஒரு பெண் குழந்தையின் நலனிற்கு செலவு செய்யும் தொகையோ வெறும் 5 பைசா தான் என கடுமையாக சாடியுள்ளார் அப்சரா ரெட்டி.