‘என் வாழ்நாள் முழுக்க அதை நீங்க கொடுத்தே ஆகணும்’!.. நீதிமன்றத்தில் ‘வேலையில்லா பட்டதாரி’ தொடர்ந்த விசித்திர வழக்கு.. மிரண்டுபோன பெற்றோர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்தன் வாழ்நாள் முழுவதும் தனது பெற்றோர் பணம் வழங்கவேண்டும் என வேலையில்லா பட்டதாரி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வசித்து வரும் ஆக்ஸ்போர்டு பட்டதாரியான ஃபைஸ் சித்திக், தனது வாழ்நாள் முழுவதும் பெற்றோர் நிதி வழங்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவரது பெற்றோரான ரக்ஷந்தா (69), ஜாவேத் (71) ஆகியோர் துபாயில் வசித்து வருகின்றனர். சித்திக் தனது உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக, வளரும் பருவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை என்றும், அதனால் தன் பெற்றோர் தனக்கு கடன்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். சித்திக் முன்பு பல சட்ட நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். இந்த இழப்பீட்டை அவரது பெற்றோர் தர மறுத்தால், அது ஒரு மனித உரிமை மீறல் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து Daily Mail பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, சித்திக் தற்போது லண்டனில் ஹைட் பார்க் அருகே ஒரு ஆடம்பரமான பிளாட்டில் வசித்து வருகிறார். இது அவரது பெற்றோருக்கு சொந்தமானது. அதன் மதிப்பு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.10,13,64,914 ). மேலும் அவரது பெற்றோரிடமிருந்து 400 டாலர்களை (ரூ. 40,548) வாராவாரம் சித்திக் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு எதிராக சித்திக் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதுதான் அவரது வேலை பறிபோவதற்கு காரணமாக அமைந்தது. அந்த புகாரில், தான் படிக்கும் காலத்தில் தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வின்போது பரீட்சை எழுதுவது சிரமமாக இருந்தது என ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகம் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் இதற்காக 1 மில்லியன் டாலர் இழப்பீடும் கோரியிருந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரது கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. மேலும் படிக்கும் காலகட்டத்தில் சித்திக் மனஉளைச்சலில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக்கூறி நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாழ்நாள் முழுவதும் நிதி வேண்டும் என சித்திக் தொடர்ந்த வழக்கால் அவரது பெற்றோர் அதிர்ச்சியில் மிரண்டு போயுள்ளனர்.