'யூடியூப் கத்து கொடுத்திச்சு...' 'பண்ணினேன்...' அதுல என்னங்க தப்பு இருக்கு...? - சிக்குன உடனே 'யூடியூப்' மேல பழி போட்ட நபர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் சில மாவட்டங்களில் இன்னும் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்படவில்லை.
அதில் கோவை மாவட்டமும் ஒன்று. முழு ஊரடங்கு அமலில் உள்ள கோவையில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டே உள்ளன. இதனால் கோவையில் தற்போது கஞ்சா உள்ளிட்டவற்றை போதைக்காகப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் மதுபாட்டில்களைக் கடத்தி வந்து விற்பனை செய்யும் நடைமுறையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த மோகன் நாயர் என்பவர் யூட்யூப் சேனல் பார்த்து தன்னுடைய வீட்டிலேயே குக்கரை வைத்து சாராயம் காய்ச்சி அதனை அருகில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மோகன் வீட்டை சுற்றியும் அவரின் நடவடிக்கை குறித்தும் நோட்டமிட்டுள்ளனர்.
அப்போது, விளையாட்டு மைதானத்தில் மோகன் நாயர் சாராயத்தை விற்பனை செய்யும்போது மோகனை கையும் களவுமாக மடக்கிப்பிடித்து போலீசார் கைது செய்தனர்.
அதோடு மோகனின் வீட்டில் சோதனையிட்டபோது குக்கர் மற்றும் மது பாட்டில்களில் சாராயத்தைக் காய்ச்சி அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்தது உறுதியானது.
இதுகுறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த மோகன், 'நான் என்ன தப்பு பண்ணினேன்? சாராயம் காய்ச்ச யூடியூப் சொல்லிக் கொடுத்தது, அதன்படி செய்தேன்' எனவும் கூறியுள்ளார்.
மேலும், மோகன் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருள்கள், 2 லிட்டர் கள்ளச் சாராயம், 1.75 லிட்டர் ஊறல் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.