'ஆபாசத்தை கடந்த மதனின் கோர முகம்'!.. மனைவியுடன் இணைந்து பின்னிய மாய வலை!.. யூடியூப் சேனல் மூலம் கோடிக்கணக்கில் மோசடி அம்பலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jun 16, 2021 10:45 PM

இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூடியூபில் ஆபாச வர்ணனையோடு வெளியிட்ட மதனின் மற்றொரு கோர முகம் தற்போது வெளிவந்துள்ளது.

youtuber madan wife kiruthika money cheating exposed

சிறுவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பப்ஜி விளையாட்டில் உள்ள நுணுக்கங்களை வீடியோக்களாக வெளியிட்டு குறுகிய காலத்தில் அதிக சப்ஸ்கிரைபர்களுடன் யூடியூபில் பிரபலமடைந்த மதன், சேலத்தை சேர்ந்தவர்.

டாக்சிக் மதன், மதன் ஓபி ஆகிய இரு யூடியூப் சேனல்கள் மூலம் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக யூடியூப்பில் லைவ்வாக விளையாடியதோடு, அதில் வர்ணனையாக தொடர்ந்து கொச்சையான வார்த்தைகளால் பெண்களை ஆபாசமாக பேசியதால் சர்ச்சையில் சிக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சென்னை புளியந்தோப்பு போலீசார், சேலத்தில் மதனின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி கிருத்திகா மற்றும் மதனின் தந்தை மாணிக்கம் ஆகியோரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கிருத்திகாவை கைது செய்த போலீசார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வருகிற 30ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர்.

மதன் தனது யூடியூப் சேனலில் தனது பள்ளி பருவ புகைப்படத்தை போட்டோஷாப் செய்து புரொபைல் டிபியாக வைத்திருந்த நிலையில், தற்போது அவருடைய உண்மையான தோற்றத்துடன் இருக்கும் புகைப்படங்களையும், அவருடைய வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றையும் போலீசார் கைப்பற்றினர். இதில் அவர், இந்த ஆபாச விளையாட்டு சேனலை பயன்படுத்தி மாதந்தோறும் நன்கொடை என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மதனின் மனைவி கிருத்திகாவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

2 வருடங்களுக்கு முன்பு பப்ஜி கேமுக்கு அடிமையான சென்னையை சேர்ந்த சாஃப்ட்வெர் என்ஜினியரான கிருத்திகாவும், மதனும், முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்துள்ளனர். பின்னர், சேலத்தில் கணவன் மனைவியாக வாழ்ந்துவந்த இந்த ஜோடிக்கு 8 மாத குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது.

கிருத்திகாவுக்கு கேமிங்கில் அதிக விருப்பம் இருந்ததால் அவரது ஆலோசனையின் பேரில், கொரியன் கேம் பலவற்றை வி.பி.என் சர்வர் மூலம் பதிவிறக்கம் செய்து யூடியூபில் மதனை, லைவாக விளையாடவைத்து பதிவேற்றம் செய்துள்ளார். தான் பேசும் ஆபாச வார்த்தைகளை கேட்டு ரசிக்கும் பெண்ணாக தனது மனைவியையே பேச வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இரவு இன்ஸ்டா கிராம் சாட்டிங்கில் பேசலாம் எனக்கூறி இதனை பார்க்கும் மற்ற பதின்பருவ சிறுமிகளையும், சிறுவர்களையும் தனது கேமிங் சேனலுக்கு அடிமையாக்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி, தன்னை ஒரு சமூக அக்கறை கொண்டவர் போல காட்டிக் கொண்டு தினமும் லைவில் ஏதாவது ஏழை நோயாளிக்கு உதவுவது போல Paytm மற்றும் Google Pay எண்களை வழங்கி அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார். ஆனால், அந்த பணத்தின் மூலம் இவர் யாருக்கும் உதவி செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், அவரை யூடிபில் வள்ளல் போல புகழ்வதற்காக இவருடன் விளையாடும் சில நபர்களுக்கு மாதந்தோறும் நல்ல தொகை ஒன்றை சம்பளமாக கொடுத்துள்ளார். அதில் மனைவியின் ஏற்பாட்டின் பேரில் 4 இளம் பெண்களும் விளையாடியது தெரியவந்துள்ளது.

கிருத்திகா வீட்டில் இருந்தே மென்பொறியாளராக பணிபுரிந்து வரும் நிலையில், எந்த வேலைக்கும் செல்லாமல் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் விளையாடும் மதனின் வங்கி கணக்கிலும், கிருத்திகாவின் வங்கி கணக்கிலும் கோடிக்கணக்கில் பணம் இருப்பு உள்ளதையும், அப்படி ஏமாற்றி வசூலித்த தொகையில் 3 AUDI கார்களை வாங்கியுள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், அவரது 2 யூடியூப் சேனல்களுக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தது முதல், அட்மினாக இருந்து ஏராளமான வசதியான வீட்டுப் பெண்களிடம் மதனை பேசவைத்து அதன் மூலம் பணம் பறிப்பில் ஈடுபட்ட கிருத்திகாவையும், அவர்களது மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்த மதனின் தந்தை மாணிக்கத்தையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரது 2 ஆபாச யூடியூப் சேனல்களைப் போல கோடி கணக்கில் மோசடியாகப் பெற்ற நன்கொடை பணம் உள்ள அவர்களது 2 வங்கிகணக்குகளையும் முடக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, தான் போலீசில் சிக்கி ஜெயிலுக்கு சென்று வந்தால், தனது ஆட்டம் இன்னும் மூர்க்கதனமாக இருக்கும் என்று மிரட்டி இருந்த மதனை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், அவரைப் புகழ்ந்து மார்கெட்டிங் செய்து மோசடிக்கு உடந்தையாக இருந்த பப்ஜி டோம்னிக் உள்ளிட்ட மற்ற கூட்டாளிகளையும் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Youtuber madan wife kiruthika money cheating exposed | Tamil Nadu News.