திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சாமுவேல் என்பவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது. 35 வயதான சாமுவேல் வீரபாண்டி பகுதியில் தங்கி மத போதனை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரிடம் பிரார்த்தனைக்காக வந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவு கொடுத்ததாக சாமுவேல் மீது புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகாரளித்திருக்கின்றனர்.
உடல்நலக் குறைவு
சிறுமியின் பெற்றோரின் புகாரைப் பதிவு செய்த திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே சாமுவேலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவற்றைக் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுவந்திருக்கிறது.
இந்நிலையில் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரி நேற்று முன்தினம் மதபோதகர் சாமுவேலை கைது செய்திருக்கிறார். நீதிமன்றத்தில் சாமுவேலை ஆஜர்படுத்திய ஆய்வாளர் சிவசங்கரி பின்னர் அவரை உடுமலை கிளை சிறையில் அடைத்திருக்கிறார்.
மத போதகர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது திருப்பூர், வீரபாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்சோ சட்டம்
பாலியல் தாக்குதல்களிலிருந்து குழந்தைகளைக் காக்கவும், அப்படியான தாக்குதலைச் சந்தித்த குழந்தைகளை மீட்டு உரிய நீதியினை வழங்கவும் கடந்த 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்படுபவருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து குற்றம்செய்தவர்க்கு தண்டனை வழங்க வேண்டும்.
* பலவந்தமான பாலியல் தாக்குதல் செய்வது (Penetrative Sexual Assault).
* எல்லைமீறிய பலவந்தமான பாலியல் தாக்குதல் செய்வது (Aggravated Penetrative Aexual Assault)
* பாலியல் ரீதியான தாக்குதல் (Sexual Assault)
* எல்லைமீறிய பாலியல் தாக்குதல் (Aggravated Sexual Assault)
* பாலியல் தொந்தரவு (Sexual Harassment)
* குழந்தைகளை வைத்து ஆபாச படங்கள் எடுத்தல்
ஆகிய ஆறு வகை குற்றங்களைச் செய்வோரை இந்த போக்சோ சட்டத்தின் மூலம் கைது செய்யலாம் என்கிறது இந்திய அரசியலமைப்பு.