அடுத்தடுத்து குவியும் பாலியல் புகார்கள்!.. பாய்ந்தது போக்சோ சட்டம்!.. வேகம் எடுக்கும் போலீஸ் விசாரணை!.. சிக்கலில் சிவசங்கர் பாபா!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடவுளின் அவதாரம் என தன்னைக் கூறிக் கொள்ளும் சிவசங்கர் பாபா மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் 64 ஏக்கர் பரப்பில் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியின் விடுதியில், தங்கிப் பயிலும் மாணவியரிடம் சிவசங்கர் பாபா பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிவசங்கர் பாபா மீது நூற்றுக்கணக்கான புகார்கள் இணைய வழியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கொடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அவருக்கு சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், சிவசங்கர் பாபா உத்தரக்கண்ட் சென்றுள்ளதாகவும், நெஞ்சுவலி காரணமாக டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவியர் இருவரும், இப்போது படித்து வரும் மாணவி ஒருவரும் புகார் அளித்துள்ளனர். விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சிலரைக் கடவுளின் அவதாரமான சிவசங்கர் பாபாவுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் எனக் கூறி ஆசிரிமத்துக்கு அழைத்துச் சென்று அவர்களுக்குக் கட்டாயப்படுத்தி மது ஊற்றிக் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவசங்கர் பாபா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் போக்சோ (POCSO), கடத்தல், துன்புறுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சிவசங்கர் பாபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி வளாகத்தில் தங்கி சிவசங்கர் பாபாவுக்குப் பணிவிடை செய்யும் பெண் ஊழியர்கள் சிலரும் இதற்கு உடந்தை என்பதாலும், நீண்ட காலமாக இதுபோன்று நடந்து வந்துள்ளது என்பதாலும், விரிவான விசாரணை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், டேராடூனில் சிவசங்கர் பாபா இருப்பதாகக் கூறப்படுவதால் அங்கு சென்று விசாரணை நடத்துவதற்காக மாநிலப் புலனாய்வு அமைப்பான சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.