'அது ஒன்னும் தப்பில்லையே'!.. சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக... 3 பள்ளி ஆசிரியர்கள் பரபரப்பு கருத்து!.. புதிதாக கிளம்பிய சர்ச்சை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளிச்சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரால், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா, சிறுமிகளிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றி அங்குள்ள 3 ஆசிரியைகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில், தன்னை "கடவுள்" என்று மக்களை ஏமாற்றி கேளம்பாக்கத்தில் ஆசிரமம் நடத்திவந்த சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி காவல்துறையினர், டெல்லியில் வைத்து கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
முன்னதாக, நெஞ்சுவலி என்று கூறி டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, சிவசங்கர் பாபாவின் உடல்நிலை சரியாக உள்ளது என்பதை மருத்துவ பரிசோதனை செய்து உறுதிபடுத்திய காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டதை அடுத்து, தற்போது ஆசிரம பள்ளியில் பணிபுரிந்துவரும் 3 ஆசிரியைகள் உள்ளிட்டோர் நட்சத்திர விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, அந்த ஆசிரியைகள் 3 பேரும் தெரிவித்த கருத்துகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிவசங்கர் பாபா, பள்ளியில் எந்த மாணவிகளிடமும் அத்துமீறவில்லை என்றும், அவரது அறையில் என்ன நடந்தது? என்பதை காவல்துறை விசாரித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பின்னர் அதுகுறித்து பேசலாம் என்று ஆரம்பித்த அந்த 3 ஆசிரியர்களிடம் செய்தியாளர்கள் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவர்களிடம் உரிய பதிலில்லை.
சிவசங்கர் பாபா சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாரா? என்ற கேள்விக்கு அவர்களிடம் இருந்து தெளிவான பதில்கள் எதுவும் வரவில்லை. மேலும், சிவசங்கர் பாபா தப்பி ஓடவில்லை என்றும், தாங்கள் தான் போலீசுக்கு தகவல் தெரிவித்து, அவர் இருக்கும் இடத்தை கூறியதாகவும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
அதுமட்டுமின்றி, சிவசங்கர் பாபாவை பிடிக்க போலீசுக்கு உதவியதாகக் கூறிய மூவரில் ஒருவர் கூட, சிறுமிகளை சிவசங்கர் பாபாவிடம் கூட்டிச்சென்ற இரு ஆசிரியைகள் குறித்த கேள்விக்கு, தெளிவான பதில் அளிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபாவின் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய போது, ஆசிரம கோவிலில் நடக்கின்ற சத்சங்கில் பங்கேற்கும் சிறுமிகளை அவர்களது பெற்றோர் முன்னிலையில் சிவசங்கர் பாபா, கட்டியணைப்பதும், முத்தமிடுவதும், தொடுவதும், தட்டிக்கொடுப்பதும் சகஜமாக நடக்கும் என்றும், அது தவறான தொடுதல் அல்ல, நல்ல தொடுதல் தான் என்று ஒரு ஆசிரியர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்கள், தங்கள் பள்ளிக்கூடம் மிகவும் பாதுகாப்பானது என்றும், சிவசங்கர் பாபா மிகவும் நல்லவர் என்றும், சிவசங்கர் பாபா குறித்து பல்வேறு வதந்திகள் பரவுவதால் தங்கள் நிலையை விளக்கியதாகவும் தெரிவித்தனர்.
அப்போது பள்ளி நேரம் முடிந்த பிறகு, பள்ளி மாணவிகள் சிவசங்கர் பாபாவை தனியாக அவரது அறையில் பார்த்து ஆசி பெற வைக்கப்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு மாணவிகளே சிவசங்கர் பாபாவை பார்க்க ஏங்குவார்கள் என்றும், இரண்டு தரப்பிலும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தெரிவித்தனர்.
3 மாணவிகளின் புகார்களின் பேரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக பள்ளி ஆசிரியைகளே பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து பொதுவெளியில் பேசியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்
