சிவசங்கர் பாபாவுக்கு அடுத்த செக்!.. தீவிரமடையும் குற்றச்சாட்டுகள்!.. துருவி துருவி விசாரணை நடத்தும் சிபிசிஐடி போலீஸ்!.. பகீர் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் இவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், 2வது வழக்கில் செங்கல்பட்டில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, பாலியல் வழக்கில் ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா தரப்பில் அவரது உதவியாளர் சுஷ்மிதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கடந்த 19ம் தேதி விசாரித்த நீதிபதி, இரண்டு போக்சோ வழக்குகளிலும் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, சிவசங்கர் பாபா மீதான 3வது போக்சோ வழக்கிலும் அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். மேலும், 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய தேவையான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை இன்று சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.