சட்டத்தோட 'ஓட்டை' வழியா தப்பிச்சிடுவாங்க...! 'அந்த மாதிரி' சொல்றது ரொம்ப அபத்தம்... ஸோ 'அதுவும்' போக்சோல தான் வரும்...! - உச்சநீதிமன்றம் அதிரடி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த சில மாதங்களுக்கு முன் 39 வயது நபர் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரணை செய்த அமர்வு நீதிமன்றம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 39 வயது நபரை குற்றவாளி என தீர்ப்பளித்து போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்தது.
இதனை எதிர்த்து அந்த நபர் மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரணை செய்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கேந்திவாலா என்பவர் குற்றம் சுமத்தப்பட்ட நபர் சிறுமியின் ஆடையை கழட்டாமல் தான் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
எனவே, உடலும் உடலும் நேரடியாக தொடர்பில் இல்லாததால் இந்த குற்றம் போக்சோ சட்டத்தின் கீழ் வராது. சிறுமியின் மானத்துக்கு களங்கம் கற்பிக்க முயன்றார் என்ற அளவில்தான் தண்டனை வழங்க முடியும் என யாரும் எதிர்பாராத தீர்ப்பை வழங்கி அவர் மீது போடப்பட்ட போக்ஸோ சட்டத்தையும் ரத்து செய்தார். இந்த தீர்ப்பு மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அட்டர்ஜி ஜெனரல் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீடு மனுவை நீதிபதி உதய் உமேஷ் லலித், நீதிபதி எஸ் ரவீந்திர பட் மற்றும் நீதிபதி பேலா எம் திரிவேதி அடங்கிய அமர்வு இந்த வழக்கில் இன்று (18-11-2021) தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில், 'போக்சோ பிரிவு 7-ன் கீழ் உடல் தொடுதல் மட்டும் தான் போக்சோ சட்டத்தின் கீழ் வரும் என்பது அபத்தமானது மற்றும் குழந்தைகளை பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டத்தின் நோக்கத்தை அழித்துவிடும்'
'பாலியல் வன்கொடுமை குற்றத்தின் முக்கிய நோக்கமே பாலியல் எண்ணம் தான், உடல்- உடல் தொடர்புடையது அல்ல. ஒரு விதியை உருவாக்குவது அதற்கு வலுசேர்க்க வேண்டுமே தவிர அதனை அழித்துவிட கூடாது.
ஒரு சட்டம் இயற்றபடுவதும், அதன் நோக்கமும் குற்றவாளியை சட்டத்தின் கீழ் நிரூபிக்கவே தவிர அவர்களை சட்டத்தின் கண்ணிகளில் இருந்து தப்பிக்க அனுமதிப்பதாக இருக்க கூடாது' என மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.