'தலைப் பிரசவத்துக்கு வந்த புள்ள'...'இப்படி பண்ணிட்டாங்களே'...தாய்க்கும், சேய்க்கும் நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 30, 2019 11:32 AM

தலைப் பிரசவத்துக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணும், அவரது குழந்தையும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Ramanathapuram: Pregnant Woman Dies During Delivery at Govt Hospital

ராமநாதபுரத்தை அடுத்துள்ள ராஜசூரியமடை பகுதியைச் சேர்ந்தவர், முருகேசன். வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் முருகேசனுக்கும் சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடி பகுதியைச் சேர்ந்த கீர்த்திகாவுக்கும், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கீர்த்திகா, உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊரான ஆர்.எஸ்.மடைக்கு வந்துள்ளார். பகலில் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்பாட்டுள்ளார்.

இதையடுத்து கீர்த்திகாவுக்கு நேற்று பிரசவவலி எடுத்துள்ளது. உடனடியாக கீர்த்திகாவின் உறவினர்கள் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் கீர்த்திகாவும் அவரது ஆண் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனை அறிந்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதனைத்தொடர்ந்து கிர்த்திகா மற்றும் அவரது குழந்தையின் உடல்கள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே நேற்று காலை கீர்த்திகாவின் உறவினர்கள் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரசவத்திற்கு கீர்த்திகாவை அனுமதிக்க வந்தபோது டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை என்றும், நர்சுகள் மட்டுமே இருந்ததாகவும், தாமதமாகவே டாக்டர்கள் வந்ததால் உரிய சிகிச்சை கிடைக்காமல் தாயும், குழந்தையும் இறந்துவிட்டனர் என புகார் தெரிவித்தனர்.

இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கீர்த்திகாவின் பிரசவத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் முடிந்தபின்னர் 5-ந் தேதிக்குள் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் கீர்த்திகா குடும்பத்தினருடன் நேரடி விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில், மருத்துவர்கள் முறையாகப் பணியாற்றுவதில்லை என்ற குற்றசாட்டு கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த மே மாதத்திலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தலைப் பிரசவத்திற்கு வந்த பெண்ணும், அவரது குழந்தையும் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #PREGNANT WOMAN #RAMANATHAPURAM #GOVERNMENT GENERAL HOSPITAL #DELIVERY