'குடும்பத்துக்கே ஐஸ் கிரீமில் விஷம்'... 'சைக்கோ கொலைகாரர்களை மிஞ்சிய ஐ.டி.ஐ மாணவர்'... 'கூகுள் ஹிஸ்ட்ரியை பார்த்து ஆடிப்போன போலீசார்'... நடு நடுங்க வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதன்னுடைய சுய லாபத்திற்காக ஒரு இளைஞர் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சொல்வார் என்பதற்குப் பெரிய உதாரணமாக நடந்துள்ளது, இந்த கொடூர சம்பவம்.
கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள அரிங்கல் கிராமத்தைச் சேர்ந்த பென்னி - பெஸ்ஸி தம்பதி. இவர்களின் மூத்த மகன் ஆல்பின். 21 வயது இளைஞரான இவர், ஐ.டி.ஐ படித்து விட்டு ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 16 வயதில் ஆன் என்ற சகோதரியும் உள்ளார். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், ஆல்பினின் வேலை பறிபோனது. இதனால் வீட்டிலேயே இருந்துள்ளார். வீட்டிலிருந்த அவர் எப்போதும் போனும் கையுமாக இருந்துள்ளார். எப்போது பார்த்தாலும் யாருடனாவது போனில் பேசிக் கொண்டிருந்த அவரை, பெற்றோரும், தங்கை ஆனும் கண்டித்துள்ளார்கள்.
இதனால் பெற்றோர் மீதும், தங்கை ஆன் மீதும் கடும் கோபத்தில் இருந்த ஆல்பின், அவர்கள் மூவரையும் கொலை செய்யத் திட்டம் தீட்டினார். இதையடுத்து, கடந்த ஜூலை 31- ந் தேதி வீட்டில் கோழி கறி சமைத்த நிலையில், அதில் எலி மருந்தைக் கலந்து வைத்துள்ளார். ஆனால் அதில் குறைந்த அளவுக்கு மட்டுமே எலி மருந்து கலக்கப்பட்டதால், ஆல்பினின் பெற்றோர் மற்றும் அவரது தங்கைக்கு வயிற்று வலி மட்டும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உயிர் தப்பினார்கள். இது ஆல்பினை கடும் ஆத்திரத்தில் ஆழ்த்தியது. தனது முதல் முயற்சி தோல்வியடைந்ததால், அடுத்த முயற்சியில் கண்டிப்பாக மூவரையும் கொள்ள வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு செய்த ஆல்பின், இன்டர்நெட்டில் அதுகுறித்து தேடியுள்ளார்.
அதில் மனிதர்களைக் கொல்லுமளவுக்கு எலிமருந்தை உணவில் கலக்குவது எப்படி, எந்த அளவிற்குக் கலக்க வேண்டும் போன்ற விவரங்களைத் தெளிவாகப் படித்துள்ளார். பின்னர் ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கி அதில் எலி மருந்தைக் கலந்துள்ளார். பின்னர் அந்த ஐஸ் கிரீமை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார். அண்ணன் உனக்கு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்துள்ளேன் எனக் கூறி, தங்கை ஆன்னுக்கும், பெற்றோருக்கும் கடந்த ஆகஸ்ட் 5- ந் தேதி கொடுத்துள்ளார். இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர்கள் மூவரும் செருபுழா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனளிக்காமல் இளைஞரின் சகோதரி ஆன் பரிதாபமாக இறந்து போனார்.
சகோதரியின் உடலைப் பார்த்து அழுத ஆல்பின், அவரது உடலை அடக்கமும் செய்துள்ளார். பின்னர் தினமும் மருத்துவமனைக்குச் சென்று பெற்றோரைக் கவனித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் ஒரே வீட்டைச் சேர்ந்த மூன்று பேர் புஃட் பாய்ஸனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் மட்டும் எப்படி நன்றாக இருக்கிறார், என்று போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதில் எங்கேயோ தவறு இருக்கிறதே என்று போலீசாருக்கு தொடர்ந்து தோன்றிக் கொண்டிருந்த நிலையில், ஆல்பினிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது ஆல்பினின் மொபைல் போனை வாங்கி பார்த்த போலீசார் ஆடிப் போனார்கள்.
ஆல்பினின் ஆன்லைன் ஹிஸ்ட்ரியில் எலி மருந்து குறித்துத் தேடியது மற்றும் அதை வைத்து மனிதர்களைக் கொல்ல எவ்வளவு அளவு உபயோகிக்க வேண்டும் போன்ற தகவல்களைத் தேடியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆல்பினிடம் போலீசார் கிடுக்கு பிடி விசாரணை நடத்தியதில், பெற்றோர் மற்றும் சகோதரியை எலிமருந்து கலந்து கொடுத்துக் கொல்ல முயன்றது தெரியவந்தது. தனது விருப்பம் போல வாழ ஆசைப்பட்டதாகவும், மேலும் சொத்துக்கள் அனைத்தும் தனக்கே வர வேண்டும் என்ற காரணத்திற்காகத் தங்கை உட்பட மூன்று பேரையும் கொல்ல போட்ட கொடூர திட்டங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தது.
குருவிக் கூடு போல இருந்த சிறிய குடும்பத்தில், தன்னுடைய சுயநலத்திற்காக இவ்வளவு பெரிய படு பாதக செயலை செய்து ஒட்டு மொத்த குடும்பத்தையும் 21 வயதே ஆன இளைஞர் நிலைகுலையச் செய்துள்ளது கேரள மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.