”இப்படித்தான், என் மகனையும் அடிச்சே கொலை செஞ்சாங்கய்யா...!” .. எஸ்.ஐ. ரகு கணேஷின் ’அதிர்ச்சி’ பின்னணி - மகனை இழந்து கதறும் தாய்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம் பேய் குளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார். கடந்த 18 ஆம் தேதி நள்ளிரவில் தனது பெட்டிக் கடையின் அருகில் நின்றபோது கொலைசெய்யப்பட்ட இவரை ராஜ மிக்கேல் என்கிறவருடைய குழுவினர் கொலை செய்ததாக தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடுத்து கடந்த மே 23-ஆம் தேதி கொலைக்கு சம்பந்தமில்லாத ராஜ மிக்கேலின் கூட்டாளியான தச்சு தொழிலாளி துரையை தேடி வந்துள்ளார் எஸ்.ஐ ரகு கணேஷ். ஆனால் அங்கு துரையை காணாததால் அங்கிருந்த துரையின் தம்பி மகேந்திரனை சாத்தான்குளம் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற ரகு கணேஷ் 2 நாட்களாக அவரை விசாரித்து திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. அதன்பின் மறுநாள் நள்ளிரவில் மகேந்திரன் உடல் நலம் குன்றிய நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் ஜூன் 13ம் தேதி இறந்ததாக தெரிகிறது.
இந்த தகவல் தெரிய வந்ததை அடுத்து உளவுத்துறையும் நீதிபதி தரப்பும் இது பற்றிய விசாரணையை தொடங்கியது. இந்தநிலையில் மகேந்திரனின் தாயார் வடிவு இதுபற்றி ஊடகங்களிடம் தெரிவித்த போது, “சின்ன வயசிலேயே என் கணவர் போய்விட, பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்தேன். மூத்த மகன் துரை தச்சு வேலையும், இளைய மகன் மகேந்திரன் கொத்தனார் வேலையையும் பார்த்து வந்தார்கள். ஒரு பெண் பிள்ளையான சந்தானத்தை தூத்துக்குடியில் திருமணம் செய்து கொடுத்தோம். மூத்தவன் துரைக்கு என்னுடைய தங்கச்சி வீடு இருக்கும் பாப்பான்குளத்தில் கல்யாணமும் செய்து வைத்தோம்.
ஒரு நாள் யாரையோ கொன்றுவிட்டதாக ஒரே பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தபோது கொலையை செய்தது மூத்த பையன் துரைக்கு தெரிந்தவன் என்பதால், துரையைத் தேடி ரகு கணேஷ் வீட்டிற்கு வந்தார். அப்போது துரை நீண்ட நாட்களாக தனது தங்கை வீட்டில் துரை இருந்ததை கூறியதையடுத்து இரவு 2 மணிக்கு அந்த ஊருக்கு சென்ற அவர்கள் அங்கு துரை இல்லாததால் மகேந்திரனை மட்டும் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அடுத்த நாள் இரவு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். வீட்டிற்கு வந்த மகேந்திரன் வலியால் துடித்ததை அடுத்து பசியும் வலியும் அவனை கொன்றதால், அக்கா வீட்டிற்கு சென்றுள்ளான். அங்கு மயங்கி விழுந்து கோமாவுக்கு போனான். பிறகு ஜூன் 13-ஆம் தேதி இறந்தே போனான். ” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தப்பே செய்யாத ஒருத்தனை ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க. இன்னொருத்தனை கொன்னுட்டாங்க. இதற்கு எஸ்.ஐ ரகு கணேஷ் தான் காரணம். அவன் கூட்டாளி என்பதற்காக துரைதான் கொலைகாரன் என ரகு கணேஷுக்கு எப்படி தெரியும்? கொலைகாரனின் கூட்டாளி அவ்வளவுதானே? கொலைக்கும் அவனுக்கு சம்பந்தம் இல்லை என முதல் தகவல் அறிக்கையிலேயே பதிவு செய்திருக்கிறார்கள். பிறகு ஏன் அவர் துரையை தேடணும் ? துரையே சம்பந்தம் இல்லாமல் இருக்கும்போது அவனுடைய தம்பி மகேந்திரனை எதற்கு சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று லாடம் கட்டினார்கள்? எனவே மகேந்திரனின் இழப்பையும் கொலை வழக்காக பதிவு செய்து அதிலே எஸ்.ஐ ரகு கணேஷை சேர்க்கணும்” என்கிறார் மகேந்திரனின் உறவினர் காளி.
இவர்கள் பேசியது போலவே ஜெயக்குமார் கொலைக்கான எஃப்.ஐ.ஆரில் துரையின் பெயர் இல்லை என்பதும் தங்களுடைய தவறு வெளியே தெரியக்கூடாது என்பதற்காக வேறு பொய் வழக்கில் புனையப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.இந்த தகவல்களை தி நியூஸ் மினிட்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.