தற்கொலைக்கு முயன்ற கேரள தம்பதியினர்.. காப்பாற்றிய காவல்துறைக்கு பாராட்டு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 03, 2019 03:07 PM
தற்கொலைக்கு முயன்ற கேரள தம்பதியினரை உயிருடன் மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் தனது மனைவி சுஷ்ராஜ் மற்றும் 2 வயது மகன் அர்த்த மௌலிநாத் ஆகியோருடன் பழனி வந்துள்ளார். பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில், மலைக்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற ஸ்ரீநாத், பின்னர் கேரளத்தில் உள்ள தனது உறவினரை தொடர்புகொண்டு, குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தெரிவித்துவிட்டு செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அவரது உறவினர்கள் பழனி காவல்துறையினருக்கு தகவல் அனுப்பினர்.
அதன்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பழனி அடிவாரத்தில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்குள்ள ஒரு விடுதியில் ஸ்ரீநாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கியிருப்பது தெரியவந்தது.
விரைந்து சென்ற போலீசார் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் காப்பாற்றினர். அவர்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு 3 உயிர்களை காப்பாற்றிய காவல்துறையினருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.