‘1000 ரூபா குடுத்துதானே போறோம்.. ஏன் லேட் பண்றீங்க’.. இளைஞர்களை அடித்து வெளுத்த சொகுசுப்பேருந்து ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Apr 24, 2019 02:12 PM
கடந்த சனிக்கிழமை இரவு சொகுசு பேருந்து ஒன்று பிரேக் டவுன் ஆகி, வெகு நேரம் ஆகியும் எடுக்கப்படாமல் இருந்ததால், தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு நேர்ந்த கதி கேரளாவை அதிர வைத்துள்ளது.

இதில் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட சொகுசுப் பேருந்து இடையில் உள்ள ஆலப்புழா அருகே ஹரிபாட்டில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிய சில மணித் துளிகளிலேயே பிரேக் டவுன் ஆகி நடுவழியில் லைட் இல்லாத இடத்தில் நின்றது.
14 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதால் பயணிகள் இதுகுறித்து பேருந்தின் டிரைவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அப்போது முறையான பதிலும் வரவில்லை; அதே போல் பேருந்தை சரிசெய்வதற்கான முயற்சியையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து பயணிகளான சச்சின், அஸ்கர் என்கிற இரண்டு இளைஞர்கள் டிரைவருடன் ஈடுபட்ட தொடர் வாக்குவாதத்தால், அங்கு போலீஸார் விரைந்துள்ளனர். பின்னர் மாற்றுப்பேருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு 3 மணி நேரம் தாமதமாக பேருந்து நகர்ந்துள்ளது.
ஆனால் அடுத்த 1 மணி நேர்த்தில் பேருந்து கொச்சி வைட்டாலாவுக்கு அருகே செல்லும்போது, ஏற்கனவே தாமதம் குறித்து டிரைவரிடம் வாக்குவாதம் நிகழ்த்திய இளைஞர்கள் மீது சில புதிய இளைஞர்கள் 3, 4 பேர் வந்து தாக்குதல் நிகழ்த்து பேருந்தில் இருந்து கீழே இறக்கியுள்ளனர். அடிவாங்கும்போதே ,‘1000 ரூபா குடுத்து போறோம். லேட் ஆகுதுனுதானே வேற பஸ் கேட்டோம்’ என்று அந்த இளைஞர்கள் விளக்கிக் கொண்டிருக்கும்போதே, அவர்கள் தாக்கப்படும் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதுபற்றி பேசிய அந்த இளைஞர்கள், அடிதாங்க முடியாமல் இறங்கி ஓடியபோதும் கூட ஒரு குடோனில் வைத்து சிலர் அடித்ததாகவும், அங்கிருந்து தப்பியோடியபோது தங்கள் மீது பீர் பாட்டிலை வீசி தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அந்த இளைஞர்கள்தான் டிரைவர்களை தாக்கியதாகவும், அதனால் டிரைவர் ஒருவரின் மூக்கில் காயம் பட்டதாகவும் தனியார் டிராவல்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரித்த போலீஸார் பயணிகளைத் தாக்கிய பேருந்து ஊழியர்கள் 2 பேரை கைது செய்துள்ள நிலையில், இந்த பேருந்து நிறுவன ஊழியர்கள் எப்போதும் இப்படித்தான் நடந்துகொள்வதாகவும் பலர் சமூக வலைதளங்களில் கூறுவதோடு, இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
