'எனக்கு சென்னை பிடிக்கல'...'பேச்சால் மயக்கிய வாலிபர்'...'மெரினா'வில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 04, 2019 09:58 AM

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து விருத்தாசலம் வழியாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக வாலிபர் ஒருவரும், சிறுமி ஒருவரும் காத்துக் கொண்டிருந்தார்கள். சற்று பயந்த நிலையில் சிறுமி இருந்ததால் அதனை கவனித்த பயணிகள் சைல்டு ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள் இருவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது இருவரும்,`சொந்த ஊருக்குச் செல்கிறோம்' என்று கூறினர்.

Youth Arrested for Sexually Assaulting Minor Girl in Chennai\'s Marina

ஆனால் சிறுமியின் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாக இருக்க, சிறுமியை மட்டும் தனியாக அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதனைத்தொடர்ந்து அந்த இளைஞரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். ஆனால் அந்த இளைஞர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதையடுத்து இருவரையும் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சைல்டு ஹெல்ப் லைனைச் சேர்ந்தவர்கள் ஒப்படைத்தனர்.

அதன்பின்னர் நடந்த விசாரணையில், மெரினா கடற்கரையில் வைத்து அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். மேற்கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் அன்பழகன் என்றும் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே உள்ள கடையில் வேலை பார்த்து வந்த அன்பழகன், கடந்த 29ம் தேதி, தனது கடைக்கு வந்தபோது சிறுமியை சந்தித்துள்ளார்.

அப்போது சிறுமியிடம் பேச்சு கொடுத்த அந்த வாலிபர், சிறுமி, `சென்னையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறேன். மெரினாவைச் சுற்றிப்பார்க்க வந்துள்ளேன்' என்று கூறியுள்ளார். உடனே இங்கு தனியாக எல்லாம் வரக் கூடாது, இது ரொம்ப மோசமான இடம் என அன்பாக பேசியுள்ளார். அதற்குச் சிறுமி, `வீட்டில் சின்னச் சின்ன பிரச்னை. படிக்கவும் பிடிக்கவில்லை. அதனால்தான் ஸ்கூலை கட் அடித்துவிட்டு இங்கு வந்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு அன்பழகனும், `எனக்கும் சென்னையில் இருக்கப் பிடிக்கவில்லை. நான் இன்று ஊருக்குச் செல்கிறேன். நீ என்னோடு வருகிறாயா?' என்று கேட்டுள்ளார். முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமி, பின்னர் வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் கடற்கரையில் அமர்ந்து சிறிது நேரம் பேசியுள்ளார்கள். அதன்பின்பு அன்பழகன் வேலை பார்க்கும் கடைக்கு இருவரும் வந்துள்ளார்கள். அங்கு வைத்து சிறுமியை அன்பழகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சிறுமியை அழைத்துவந்துள்ளார். அங்கு ரயிலுக்காக காத்திருந்தபோது தான் சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகளிடம் இருவரும் சிக்கியுள்ளார்கள். இதையடுத்து மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாணவி இதற்கு முன் சிலரால் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சி தகவலையும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதில் மூன்று பேரின் விவரங்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இதனிடையே அன்பழகனை காலை 10 மணியளவில் மாணவி சந்தித்துள்ளார். 2 மணி நேரம் மட்டுமே அவனிடம் பேசிய மாணவிக்கு இந்த கொடுமை நடந்துள்ளது.

பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் மனம் விட்டு பேசி அவர்களின் பிரச்சனைகளை  கண்டறிய வேண்டும். அவர்களை தனிமையில் விடும் பட்சத்தில், வழிதவறி சென்று இறுதியில் இதுபோன்ற ஆபத்தில் சிக்குவார்கள் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

Tags : #SEXUALABUSE #SCHOOLSTUDENT #CHENNAI #YOUTH #MARINA BEACH #EGMORE RAILWAY STATION