'இனிமே எல்லாம் இப்படித்தான்'... திருப்பூர் கலெக்டர் அதிரடி!'.. 'குவியும் பாராட்டுக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 16, 2019 09:41 PM
திருப்பூரில், பொதுமக்கள் குறைகளை தீர்ப்பதற்கான சீரியதொரு நோக்கத்தில், வாட்ஸ்-ஆப் நம்பரை திருப்பூர் கலெக்டர் திரு. K. விஜய கார்த்திகேயன் அறிமுகப்படுத்தியுள்ளதை அடுத்து அவரது முயற்சிக்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதுபற்றி பேசிய திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன், பொதுமக்கள் தங்கள் குறைகளை, தற்போது வெளியிடப்பட்டுள்ள 97000 41114 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்பலாம் என்றும், இந்த முன்முயற்சி ஒரு புகாரை ஒரே முறை முழுமையாக விசாரித்து தீர்வளிக்கும் "செயல்முறையை" உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகவும், இது பொதுமக்களால் அளிக்கப்படும் புகார்களை அல்லது குறைகளை விரைந்து தீர்ப்பதற்கான, மிகவும் வசதியான திட்டமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த செயல்முறை நான்கு படிகளைக் கொண்டு இயங்கும் என்றும் கலெக்டர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி மக்களிடம் இருந்து குறைகளைப் பெறுதல், பெற்ற குறைகளை அவை தொடர்புடைய துறைகளுக்கு விரைந்து விநியோகித்தல், விரைந்து நடவடிக்கை எடுத்தல் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரும் விமர்சனக் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக்கொள்ளுதல், ஆகிய படிநிலைகளுடன் இந்த செயல்முறை இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு பிரத்யேக குழு மொபைல் எண் மூலம் இந்த செயல்பாடுகளை கண்காணிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, நிகழ்நேர குறைகேட்டல் என்பது அதிகாரிகளின் தரப்பில் இருந்து, குறைதீர்ப்பு மனுக்களை எந்த வித தாமதமும், தள்ளி வைப்பும் இல்லாமல் உடனடியாக நிவர்த்தி செய்வதுதான் என்றும் எவ்வாறாயினும், இந்த செயல்பாடுகளுக்கு ஒரு முன்னுதாரண மாற்றம் தேவை என்றும், மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் இணைந்து, இணங்கி இவற்றை செயல்படுத்த, ஆரம்பத்தில் நேரம் எடுக்கலாம் என்றும் கூறினார். இதேபோல், "நாங்கள் இதை அனைத்து மட்டங்களிலும் செயல்படுத்த முயற்சிப்போம்" என்றும் ஆட்சியர் திரு. விஜய கார்த்திகேயன் கூறியுள்ளார்.
