'28 வருடங்களில்' இதுதான் முதல்முறை... அடிமேல் 'அடிவாங்கும்' சீனா... ஏன் இப்டி?
முகப்பு > செய்திகள் > வணிகம்கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.8 சதவிகிதம் குறைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான சீனா தற்போது கொரோனா வைரஸால் பலத்த சரிவை சந்தித்து வருகிறது. ஒருபுறம் சீனா கொரோனா குறித்த தகவல்களை மறைத்து விட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. மறுபுறம் கொரோனாவால் பொருளாதார ரீதியாக அந்நாடு சரிவை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக கடந்த 1992-ம் ஆண்டிற்குப்பின் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி விகிதம்(GDP), 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 6.8% வீழ்ச்சி கண்டுள்ளது இதுமட்டுமின்றி கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் போது ஜிடிபி விகிதம் 9.8% குறைந்துள்ளதாக தேசிய புள்ளி விவர பணியகம் கூறியுள்ளது. இதனால் இந்த ஆண்டு 30 மில்லியன் பேர் வேலை இழக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கு முன் கடந்த 2008-2009 ஆண்டுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின்போது சுமார் 20 மில்லியன் பேர் வேலை இழந்தனர். ஆனால் தற்போது அதைவிட கடுமையான நெருக்கடிக்கு சீனா உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகளாவிய தேவை குறைவு காரணமாக பொருளாதார ரீதியாக சீனா மந்தநிலையை எதிர்நோக்கும் எனவும் கூறப்படுகிறது.