தமிழ்நாடு: “சாப்பாடு இல்ல.. காலில் செருப்பு கூட இல்ல”.. 2 நாட்கள்... 170 கி.மீ நடந்தே வந்த 7 வயது சிறுவன்.. உருக்கும் சம்பவம்! வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு நேரத்தில் சாப்பிடாமல், காலில் செருப்பு கூட இல்லாமல் 7 வயது சிறுவன் இரண்டு நாட்கள் நடந்தே வந்த சம்பவம் மனதை உருக வைத்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இரண்டாவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 3ஆம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கோவை கருமத்தம்பட்டி அருகே கட்டிட தொழிலாளர்கள் சிலர் ஊரடங்கு வேலை, வருமானம் இன்றி தவித்தனர். பசி ,பட்டினியை சமாளிக்க வேறு வழியில்லாமல் தங்களது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியை நோக்கி நடைப்பயணமாக செல்ல தொடங்கியுள்ளனர். அவர்களுடன் 7 வயது சிறுவனான சபரி என்பவரும் காலில் செருப்பு கூட இன்றி 2 நாட்களாக நடந்தே வந்துள்ளார்.
சுமார் 170 கிலோமீட்டர் நடந்து கோவை கருமத்தம்பட்டியில் இருந்து சேலம் வழியாக நடந்தே வந்த இவர்களை வழியில் பார்த்த போலீசார் விசாரித்து அவர்கள் அனைவருக்கும் முகக் கவசம் தந்தும், உணவு , தண்ணீர் வாங்கி கொடுத்துமுள்ளனர். மேலும், “குழந்தையை போய் இப்படி நடக்கவைத்து கூட்டி வருகிறீர்களே?” என்று ஆவேசமாகவும் கேட்டுள்ளனர்.
விசாரித்ததில் சிறுவன் அரையாண்டு தேர்வுக்கு பின்னரான விடுமுறை காலத்தில் தம் குடும்பத்தாருடன் கள்ளக்குறிச்சியில் இருந்து கோவைக்கு கட்டிட வேலைக்கு வந்ததாகவும் பின்னர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து கோவையில் சிக்கிக் கொண்ட இவர்கள் வேலை, வருமானம் இல்லாததால் கள்ளக்குறிச்சியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டதாகவும் கூறியுள்ளனர். பின்னர் அவ்வழியே வந்த கனரக வாகனத்தை நிறுத்தி அவர்களை சொந்த ஊரில் சேர்த்து விடும்படி போலீஸார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். போலீஸாரின் இந்த மனித நேயமும் வீடியோவில் வெளியாகி நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
