'இனிமேல் இங்கேயும் லட்டு கிடைக்கும்'...'அசத்த போகும் தமிழக கோவில்'...மகிழ்ச்சியில் பக்தர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Sep 13, 2019 06:59 PM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். அங்கு சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்பட இருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா என்றாலே லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரள்வது வழக்கம். இந்தியாவில் உள்ள தூய்மை யான புனித தலங்களில் 2-வது இடம் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, சமீபத்தில் அதற்கான விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும் என அறிவித்திருப்பது பக்கதர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும், அதிகாலை நடை திறந்ததில் இருந்து, இரவு நடை சாத்தப்படும் வரை, தீபாவளி திருநாளான வருகிற 27.10.2019-ந் தேதி முதல் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும்” என்று கூறப்பட்டு உள்ளது.
இதனிடையே பக்தர்களுக்கு லட்டு வழங்குவவதற்கான அனுமதியை அரசிடம் இருந்து கோவில் நிர்வாகம் பெற்றுள்ளது. வருகின்ற தீபாவளி முதல் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக லட்டு பிரசாதம் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. இதற்காக ரூ.5 லட்சம் செலவில் லட்டு தயாரிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அறநிலையத்துறை கோவில்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்தான் முதன்முதலாக லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.