‘பணமெல்லாம் கொடுக்க முடியாது’... ‘தகராறில் ஈடுபட்ட நபர்’... 'திடீரென துப்பாக்கியை எடுத்து’... ‘மதுரையில் பரபரப்பு’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 29, 2019 07:18 PM

மதுரை கப்பலூர் சுங்கச் சாவடியில், சுங்கக் கட்டணம் செலுத்தாமல் தகராறில் ஈடுபட்ட நபர், துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tollgate gun firing in madurai kappalur 6 arrested

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிற்பகலில் சுங்கச்சாவடியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றுள்ளன. அப்போது நெல்லையிலிருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த காரில் இருந்த 6 பேரும் நீண்ட நேரம் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த காரிலிருந்தவர்கள் தடுப்பு கம்பம் தூக்கப்பட்டவுடன் கட்டணம் செலுத்தாமலேயே அங்கிருந்து காரை ஓட்டிச்செல்ல முயன்றுள்ளனர். சுங்கச்சாவடி ஊழியர்கள் விரட்டிச் சென்ற நிலையில், காரை நிறுத்தி அதிலிருந்து இறங்கிய நபர் ஒருவர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி இரு முறை சுட்டதாக கூறப்படுகிறது.

துப்பாக்கியால் சுட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து காரினுள் இருந்த மற்ற 5 பேரும் அங்கிருந்து காரோடு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து தனித்து விடப்பட்டதை அறிந்த அந்த நபர், ஊழியர்களிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் அருகிலிருந்த பகுதிக்குள் ஓடியுள்ளார். ஊழியர்களும் விடாமல் துரத்தவே மீண்டும் 2 முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அவரை மடக்கிப்பிடித்த சுங்கச்சாவடி ஊழியர்கள், போலீசாருக்கு தகவலளித்துள்ளனர். நல்லவேளையாக இதில் யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைகலப்பின் போது காயமடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் 4 பேரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பதும், காரில் வந்தவர்கள் அனைவரும் குற்றவழக்கு ஒன்றில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ஊர்திரும்பிக் கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. 

இதனிடையே காரில் தப்பிச் சென்ற மற்ற 5 பேரையும் மதுரை உசிலம்பட்டி அருகே மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags : #GUN #SHOT #MADURAI