எங்கள் 'வலிமை'-யை சட்டசபையும் அறியும்..!- சர்ச்சையைக் கிளப்பும் மதுரை அஜித் ரசிகர்களின் போஸ்டர்
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில் மதுரை அஜித் ரசிகர்களின் வாழ்த்துப் போஸ்டர் ஒன்று தற்போது வைரல் ஆகி உள்ளது.

வலிமை படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் அஜித் உடன் இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், முக்கியக் கதாபாத்திரத்தில் ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இயக்குனர் H. வினோத் இயக்கி உள்ளார்.
'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு (13.01.2022) வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சூழலில் வலிமை திரைப்படத்துக்கும் நடிகர் அஜித்துக்கும் வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் மதுரை அஜித் ரசிகர்கள் வைரலான போஸ்டர்களை ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார்கள். இந்தப் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துதான் தற்போது பெரும் பேசு பொருள் ஆகியுள்ளது.
மதுரை அஜித் ரசிகர்கள் நடிகர் அஜித் குமாரை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்து போஸ்டர் அச்சிட்டுள்ளனர். மேலும் அந்த போஸ்டரில், "எங்களின் வலிமை-யை பட்டி தொட்டியும் தெரியும்..! சட்டசபையும் அறியும்!" என்பது போன்ற வாசகங்களையும் ரசிகர்கள் அச்சிட்டு ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் புகைப்படம் தான் தற்போது சமுக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.
நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தான் தனக்கு 'தல' என்கிற பட்டமே வேண்டாம் என்று தனது ரசிகர்களிடம் தெரிவித்து இருந்தார். மேலும், தனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிவித்தவர் அஜித். இந்த சூழலில் நடிகர் அஜித்குமாருக்கு அரசியல் கருத்துகளைப் புகுத்தி அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.

மற்ற செய்திகள்
