‘இந்த ஏரியா மக்கள் காலையிலே போய் ஓட்டு போடுங்க.. கனமழை இருக்கு’..வெதர்மேன் அலெர்ட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Apr 17, 2019 02:08 PM
இராமநாதபுரம் , கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலமான மழை பெய்துவருகிறது. இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழைபற்றி சென்னை வானிலை ஆய்வு மையமும் தமிழ்நாடு வெதர் மேனும் என்ன சொல்கிறார்கள்? குறிப்பாக தேர்தல் அன்று மழை வருமா? எந்த பகுதியில் மழை வரும் என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளன.
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இன்றும் நாளையும் தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும்
என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் இன்று காலையில் அறிவித்துள்ளபடி, கோடைமழை என்று சொல்லப்படும் மழைக்கான பருவகாலம் தென் தமிழகம் மற்றும் நெல்லை, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் தொடங்கிவிட்டதாகவும், கடலோர மாவட்டங்களை பொருத்தவரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுகொண்டாலோ, புயல் சின்னம் உருவானாலோதான் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இந்த மழை தென் தமிழகத்துக்கு மட்டுமே கனமழையாக பொழியும் என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் நாளைப் பொருத்தவரை குமரி, நெல்லை மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மாலை 4 மணிக்கு மேல் மழை இருப்பதால் வாக்களிக்கும் மக்கள் காலையிலேயே சென்று வாக்களிக்குமாறு கோரியுள்ளார். சென்னையைப் பொருத்தவரை தட்பவெப்ப நிலையில் எவ்வித மாற்றமும் காட்டவில்லை என்று கூறியிருக்கும் வெதர்மேன், சென்னை வெயில் கண்டினியூ ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
