'டேய் கரியா... போய்டியா டா'!?.. 'ரேஷன் கார்டுல மட்டும் தான் அவன் பேரு இல்ல'... அசாத்திய சாதனைகள்!.. உடைந்து போன குடும்பம்!.. கிராம மக்கள் கண்ணீர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அலாதியான அன்பை வெளிப்படுத்தும் வளர்ப்பு பிராணிகள், நம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே மாறிவிடுகின்றன. அவற்றின் பிரிவு ஆற்றாத வலியையும், துக்கத்தையும் நம்மிடையே கடத்திவிடும். அதன் தாக்கம், வெறும் சொற்களால் விவரிக்க முடியாத அளவிற்கு ஒரு குடும்பத்தை பாதித்திருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள பூனப்பள்ளியை சேர்ந்தவர் சின்னப்பா. விவசாயியான இவர், கரியன் என்ற பெயரில், காளை மாடு ஒன்றை வளர்த்து வந்தார்.
இந்த காளைமாடு ஒவ்வொரு ஆண்டும், சுற்றுவட்டாரத்தில் நடக்கும் எருது விடும் விழாக்களில் கலந்து கொண்டு வெற்றிபெற்று பல பரிசுகளை வாங்கி வந்துள்ளது.
இந்நிலையில், திடீரென்று காளை மாடு நோய்வாய்ப்பட்டு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. ஆனால், நாளுக்கு நாள் நிலைமை மோசமடையவே, உயிருக்கு போராடி வந்த கரியன் பரிதாபமாக உயிரிழந்தது.
வீட்டில் ஒருவராக வளர்ந்த காளை மாட்டை, தன் விவசாய நிலத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்த சின்னப்பா, அதற்கு மனிதர்களுக்கு செய்வதுபோல் மேளதாளம், கண்ணீர் அஞ்சலி பேனர், காளையின் உருவம் அடங்கிய கொடிகளை, தன் கிராமத்தில் வைத்து இறுதி சடங்குகளை செய்தார்.
அப்போது, கரியன் வெற்றி பெற்ற வெற்றிப் பரிசுகளையும் அதனுடன் வைத்திருந்தனர். கரியன் இறந்ததை அறிந்த சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், கரியனுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின், மிகுந்த சோகத்துடன் இறுதிச் சடங்குகளை செய்து காளை மாட்டை ஊர் மக்கள் அடக்கம் செய்தனர்.