'தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலத்திலும்...' 'உள்ளே நுழைந்தது கொரோனா...' '5 பகுதிகளுக்கு லாக்டவுன்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்து வந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் பையனபள்ளிப் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
நல்லூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் உட்பட ஐந்து பேர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலில் கடந்த இரண்டு மாதங்களாக சேவை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் 5 பேரும் கடந்த 25-ஆம் தேதி ஆந்திர மாநிலத்திலிருந்து சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.
மாநில எல்லையான நல்லூர் பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 5 பேரையும் வீட்டில் தனிமைப்படுத்தினர். பின்னர் 28ம் தேதி சுகாதாரத்துறை சார்பில் அவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அதில் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த நபர் சேலம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் இவருடன் ஆந்திராவில் இருந்து வந்த நான்கு பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் இவர்களது உறவினர்கள் எட்டு பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
தொடர்ந்து இவர்கள் வசிக்கக்கூடிய கிருஷ்ணகிரி பாலாஜி நகர், நல்லதம்பிசெட்டி தெரு, காவேரிப்பட்டினம், சண்முகம் செட்டி தெரு, பழையபேட்டை உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்க படுவதுடன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பச்சை மண்டலத்தில் இருந்த ஒரே மாவட்டமான கிருஷ்ணகிரியிலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.