‘சுடுகாட்டில்’ 4 நாள் கேட்பாரற்று கிடந்த மூதாட்டி.. மறைந்த ‘மனிதநேயம்’.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் மூதாட்டி ஒருவரை அவரது குடும்பத்தினரே சுடுகாட்டில் விட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுண்டக்காமுத்தூரில் உள்ள சுடுகாட்டில், கடந்த 4 நாள்களாக மூதாட்டி ஒருவர் கேட்பாரற்று கிடந்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக யாரும் அவர் அருகே செல்லாமல் இருந்துள்ளனர். அதில் ஒரு சிலர் சற்று தூரம் தள்ளி நின்று மூதாட்டிக்கு சாப்பாடு கொடுத்து வந்துள்ளனர். மூதாட்டியை பரிதாப நிலையைப் பார்த்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, தமுமுக மருத்துவ அணி செயலாளர் முகமது ஆஷிக் இந்த வீடியோவைப் பார்த்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளார். உடனே மூதாட்டியிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். ஆனால் அப்போது அவரால் சரியாக பேசமுடியவில்லை. மேலும் அவரின் தலையில் காயம் இருந்துள்ளது.
இதனை அடுத்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு தமுமுக தன்னார்வ அமைப்பினர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு மூதாட்டியின் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மூதாட்டியை காப்பகத்தில் சேர்ப்பதற்காக பல இடங்களுக்கு சென்றுள்ளனர். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக யாரும் மூதாட்டியை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி காப்பகத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில், அவர் சுண்டக்காமுத்தூரை சேர்ந்த விஜயா (60) என்பதும், அவரை குடும்பத்தினரே சுடுகாட்டில் விட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. மனிதநேயம் மறந்து சொந்த குடும்பத்தினரே மூதாட்டியை சுடுகாட்டில் விட்டுச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
