'வெட்டுக்கிளி' கிலோ '20 ரூபாய்...' ஒரே நாளில் 'ரூ. 1,600' வருமானம் ஈட்டினேன்... 'விவசாயி பெருமிதம்...'
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தான் மக்கள் வெட்டுக்கிளிகளை பிடித்து கோழிகளுக்கு தீவனமாக்கி வருகின்றனர். கிலோ 20 ரூபாய்க்கு வாங்கப்படுவதால் இதன் மூலம் விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றிய வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தற்போது, பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ள நிலையில், அங்கு விவசாயப் பயிர்கள் பெரும் சேதமடைந்துள்ளன.
முன்னதாக பாகிஸ்தானில் படையெடுத்த இந்த வெட்டுக்கிளிகள் அங்கு 25 சதவீத பயிர்களை நாசம் செய்துள்ளது. இதனால் 500 கோடி டாலர் வரை அந்நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெட்டுக்கிளிகளை பிடித்து கோழிகளுக்கு தீவனமாக போட பாகிஸ்தானில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை முதற்கட்டமாக செயல்படுத்த பஞ்சாப் மாகாணத்தை பிரதமர் இம்ரான் கான் தேர்வு செய்துள்ளார்.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் விவசாயம் செழிந்த பகுதியாக இருக்கிறது. இத்திட்டத்தின்படி, வெட்டுக்கிளிகளை பிடித்து கொண்டுவரும் நபர்களுக்கு கிலோவுக்கு 20 ரூபாய் பணம் கொடுக்கப்படுகிறது.
பின்னர் அந்த வெட்டுக்கிளிகள் உலர்த்தப்பட்டு கோழிகளுக்கான தீவனத்துடன் கலக்கப்படும். மேலும் வெட்டுக்கிளிகளில் நிறைய புரதம் இருப்பதால் அவற்றை முறையாக உணவில் சேர்த்து பயன்படத்தவும் பாகிஸ்தான் உணவு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
முதலில் வெட்டுக்கிளிகளை எப்படி பிடிப்பது என்பது பற்றி கிராமப்புற மக்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இரவில் வெட்டுக்கிளிகள் அமைதியாக மரங்களிலும், தாவரங்களில் கூட்டமாக அமர்ந்துவிடும். சூரியன் உதயமாகும் வரை குளிர்நிலையில் வெட்டுக்கிளிகளால் நகர முடியாது. அந்த நேரத்தில் அவற்றை எளிதாக பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு கிலோ வெட்டுக்கிளிக்கு ரூ.20 வழங்கப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்கள் இரவு முழுக்க வெட்டுக்கிளிகளை வேட்டையாடி வருகின்றனர். வெட்டுக்கிளிகளால் தனது பயிர்களை இழந்த விவசாயி ஒருவர் வெட்டுக்கிளிகளை வேட்டையாடி ரூ.1,600 பணம் ஈட்டியதாக தெரிவித்துள்ளார். தற்போது பலரும் மூட்டை மூட்டையாக வெட்டுக்கிளிகளை பிடித்து வருகின்றனர்.
பாகிஸ்தானின் மிகப்பெரிய கோழி தீவன உற்பத்தி நிறுவனமான ஹை டெக் ஃபீட்ஸ் தயாரிக்கும் தீவனத்தில் வழக்கமாக 10% சோயாபீன் இருக்கும். தற்போது சோயாபீனுக்கு பதிலாக வெட்டுக்கிளிகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் வெட்டுக்கிளி படையெடுப்பை முழுவதுமாக ஒழிக்க முடியாது என்றாலும், ஓரளவுக்கு சேதத்தை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
