‘நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான’... ‘வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு வாபஸ்’... ‘சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றுள்ளது.

கடந்த 2002 முதல் 2005-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் வருமான வரியை முறையாகக் கட்டவில்லை என்று குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை , அவருக்கு ரூ 66.22 லட்சம் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியது. தனக்கு அளிக்கப்பட்ட நோட்டீசை எதிர்த்து ரஜினிகாந்த் வருமான வரித்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், ரஜினிக்கு அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்தது.
இதனை எதிர்த்து, வருமான வரித்துறை சார்பில், 2014-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராதத் தொகைக்கு புதிதாக வழக்கு தொடருவது இல்லை எனவும், ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, வருமான வரித் துறை சுற்றறிக்கையை தாக்கல் செய்தார்.
இதன் அடிப்படையில் ரஜினிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற வருமான வரித்துறைக்கு அனுமதி அளித்து வருமானவரி துறை மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
