ரஜினிகாந்த் சொன்னது உண்மையா?... 1971ல் நடந்தது என்ன?... அன்றைய செய்தித் தாள்களின் நேரடி ரிப்போர்ட்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 22, 2020 02:55 PM

1971-ம் ஆண்டு சேலத்தில் தி.க. நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு மற்றும் ஊர்வலம் பற்றி அப்போதைய  செய்தித் தாள்களில் வெளியான தகவல்கள்  தற்போது ஆதாரங்களாக காணக் கிடைக்கின்றன.

Is Rajini\'s statement true?- 1971 Newspaper information

1971 ம் ஆண்டு ஜனவரி 24 ம் தேதி ஈ.வே.ரா தலைமையில் தி.க.,சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. அந்த ஊர்வலத்தில் இந்து கடவுள்கள் பற்றி ஆபாசமாக சித்தரித்து படங்கள் சிலைகள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பேசி இருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு திராவிடர் கழகத்தினர் மற்றும் தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் வரலாற்று சம்பவத்தை தவறாக குறிப்பிட்ட ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

ஆனால் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று அறிவித்தார். தான் பத்திரிகையில் வந்த தகவலின் அடிப்படையிலும், அப்போது நேரில் பார்த்த லட்சுமணன் சொன்ன தகவலின் அடிப்படையிலும்தான் பேசினேன் என்றும் விளக்கம் அளித்தார்.

1971ம் ஆண்டு ஜனவரி அன்று நடைபெற்ற தி.க. ஊர்வலம் குறித்து அன்றைய தினமணி, தினத்தந்தி போன்ற நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தினமணி நாளிதழ் வெளியிட்ட செய்தியில், திராவிட கழத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் சுமார் 700 பேர் கலந்து கொண்டதாகவும், ஹிந்து புராண புருஷர்களை பற்றி ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகள் கொண்ட அட்டைகள் ஊர்வலத்தில் தாங்கிச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும்,  முருகக் கடவுள் பிறப்பை பற்றி ஆபாசமான அட்டைகள் இருந்தன  என்றும், ஒரு வண்டியில் கொண்டு வரப்பட்ட 10 அடி உயரமுள்ள ராமர்  சிலையை பலரும் கூடி நின்று செருப்புகளால் அடித்துக் கொண்டே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்வலத்தின் முடிவில் மரத்தினால் செய்யப்பட்டிருந்த ராமர் சிலை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஊர்வலக்காரர்களுக்கு பயந்து பல கடைகள் மூடப்பட்டிருந்தன என்றும், திராவிட கழகத்தலைவர் ஈ.வெ.ரா ஊர்வலத்தின் கடைசியில் ஒரு டிராக்டரில் அமர்ந்து பவனி வந்தார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இந்நிகழ்வு குறித்து தினந்தந்தி நாளிதழில் வெளியான செய்தியில், அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பேட்டியை வெளியிட்டுள்ளனர். அதில், சேலத்தில் நடைபெற்றது, திராவிடர் கழக மாநாடு. தி.மு.கழக மாநாடு அல்ல எனத் தெரிவித்துள்ளார். மேலும், மதவாதிகள் மனம் புண்படும்படியாக ராமர் சிலை போன்றவைகளை சேலம் மாநாட்டு ஊர்வலத்தில் ஆபாசப்படுத்தியதாக வந்த செய்தி கண்டு தாம் வருத்துப்படுவதாகத் தெரிவித்திருந்தார். மதவாதிகளானாலும், அரசியல்வாதிகளானாலும் அவர்கள் மனம் புண்படும்படியாக எந்த பிரசாரம் நடத்தப்பட்டாலும் அதை இந்த அரசு விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

Tags : #RAJINIKANTH #THUGLAK #1971 DAILY PAPERS #KARUNANITHI #THINATHANTHI #THINAMANI