‘வெளுத்து வாங்கும் மழை’... ‘தத்தளிக்கும் நீலகிரி’... ‘அடுத்து வரும் 3 நாட்கள்’... ‘வானிலை மையம் எச்சரிக்கை’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Aug 08, 2019 11:39 AM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது. இதனால் வங்கக்கடலில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்யுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நீலகிரி, கோவை, மாவட்ட மலைப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா, குன்னூர், கோத்தகிரி தாலுகாகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாடந்துரை ,ஆலுவயல் செல்லும் சாலையில் மழைநீர் கரை புரண்டு ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
உதகையில் இருந்து கேரளா மைசூர் செல்லும் சாலையில் பைக்காரா தேசிய நெடுஞ்சாலையில் நிச்சரிவு ஏற்பட்டு சாலையின் பாதியளவு துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த சாலையில்வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்கின்றன. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பது குறித்து, கடலூர், பாம்பன், தூத்துக்குடி, வ.உ.சி. துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.