"நிவாரணத்தொகைக்கு எதுக்கு சந்தா கட்டணும்?" .. இளைஞர்களிடம் சிக்கிக் கொண்டு ‘ரோல்’ ஆன போலி அதிகாரிகள்.. 'பளார்.. பளாரென விழுந்த அடி!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 27, 2020 12:35 PM

கொரோனா ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் வருமானம் இல்லாமலும் கவலையில் உழன்று கொண்டிருக்கும் நிலையில்,  கூலித் தொழிலாளர்களும் நெசவாளர்களும் நிறைந்த சேலம் நெய்க்காரப்பட்டியின் அமைப்பு சாரா நலவாரியத்துறை அதிகாரிகள் என்று கூறி சென்ற கும்பல் ஒன்று பிரதமர் நிவாரண நிதி 5 ஆயிரத்தைப் பெற்று தருவதாகவும், அதற்கு முன்னதாக 300 ரூபாய் கொடுத்து இந்த நலவாரியத்தின் சந்தாதாரராக சேரும்படி கூறியுள்ளனர்.

fake officers caught in the name of corona relief fund

மொத்தத்தில் 300 ரூபாய் கொடுத்து சந்தாதாராக இணைந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரும் என்று மக்களை நம்பவைத்து இந்த வசூல் சக்ரவர்த்திகள் வீடு வீடாக சென்று  வசூல் செய்துகொண்டிருந்தபோதுதான், அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த அதிகாரிகளை பார்த்து சந்தேகமடைந்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவர்களிடம் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்த மோசடி அதிகாரிகள் உளறி சிக்கிக் கொண்டனர். இதனை அடுத்து, பணம் கொடுத்தவர்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர்களை சரமாரியாக அடிக்கத் தொடங்கினர். ஆனால் தர்ம அடியை தாங்கிக் கொள்ள முடியாத அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் தாங்கள் பிரபலங்களுடன் எடுத்த புகைப்பட ஆல்பத்தை நீட்ட, வசமாக சிக்கிக் கொண்ட அவர்களை விசாரணைக்காக, கொண்டாலம்பட்டி காவல்துறையினர் தகவலறிந்து வந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

நிவாரணத்துக்கு அரசு மக்களிடம் முன்பணம் வசூலிப்பதில்லை என்பதையும், அரசு முன்னறிவிப்பின்றி எந்த ஒரு நிவாரணத்தையும் வழங்குவதில்லை என்பதையும் நினைவில் கொண்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.