அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடம்!?.. சீனாவிலிருந்து மருத்துவக் குழு புறப்பாடு!.. வட கொரியாவில் உச்சகட்ட பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்கிம் ஜாங் உன்னுக்கு உடல் நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை சீனா, வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகிறது. இந்த நிலையில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் சமீப நாட்களாக வெளி உலகிற்கு வரவில்லை. கடந்த 15ம் தேதி நடைபெற்ற வடகொரியாவின் நிறுவனரும், தனது தாத்தாவுமான கிம் இல் சுங்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிம் ஜாங் அன் கலந்து கொள்ளவில்லை.
கடந்த 2011-ம் ஆண்டு தலைவராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் ஜாங் அன் தவிர்த்ததால், இது பல சந்தேகங்களை எழுப்பியது.
40 வயதுக்குள் இருக்கும் அதிபர் கிம்முக்கு அதீதமான புகைப்பழக்கம், உடல் பருமன், உடல்சோர்வு உற்சாகமின்மை, அதிக தூக்கம் ஆகியவற்றால் அவதிப்பட்டார். இதனால் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் கிம்மின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சிஎன்என் சேனல் செய்தி வெளியி்ட்டது.
இந்நிலையில், கிம் ஜாங் அன்னுக்கு உடல் நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை சீனா, வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன வெளியுறவு துறையின் மூத்த உறுப்பினர் தலைமையிலான தூதுக்குழு நேற்று முன்தினம் பீஜிங்கில் இருந்து வட கொரியாவுக்கு புறப்பட்டதாக வடகொரியா விவகாரங்களை கையாளும் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
