ஹோட்டல் ரூமில் கிடந்த குக்கர் மூடி.. குற்றாலத்தில் சமையல் மாஸ்டர் கைது.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குக்கர் மூடியால் அடித்து சமையல் தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ராமச்சந்திரபுரம் தெருவைச் சேர்ந்தவர் சமையல் தொழிலாளி பாலமுரளி (வயது 48), திருநெல்வேலி சத்திரம் புதுக்குளம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவர் சமையல் மாஸ்டராக உள்ளார். இவர்கள் இருவரும் வெளியிடங்களுக்கு சென்று சமையல் செய்து கொடுத்துவிட்டு வந்துள்ளனர். எங்கு வேலைக்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே சென்று வந்தனர்.
குற்றாலம்
இந்த நிலையில் பழைய குற்றாலம் சாலையில் உள்ள தங்கும் ஹோட்டல் ஒன்றில் இருவரும், கடந்த 4 நாட்களாக தங்கி சமையல் வேலை செய்து வந்துள்ளனர். மேலும் இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் இருவரும் மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வேலை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சமையல் மாஸ்டர்
இதில் ஆத்திரமடைந்த முருகன் அருகில் கிடந்த குக்கர் மூடியால் பாலமுரளியின் தலையில் பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பாலமுரளி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குக்கர் மூடி
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாலமுரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முருகனை போலீசார் கைது செய்தனர். குக்கர் மூடியால் சமையல் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
