'கொரோனா வைரஸை அழிக்கும் இ-சானிடைசர்...' 'இதெல்லாம்' உள்ள வைக்கலாம்...! 'வெறும் 20 நிமிசத்துல அழிச்சிடும்...' மதுரை எஞ்சினியரின் கண்டுபிடிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருத்துவர்கள் முதல் பொது மக்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் அன்றாட பொருளில் தொற்றி இருக்கும் கொரோனா வைரஸை உடனடியாக அழிக்கும் 'இசட்பாக்ஸ்' என்னும் இ-சானிடைசர் கருவியைக் கண்டுபிடித்துள்ளார் மதுரையை சேர்ந்த பொறியாளர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் தமிழக இளைஞர்கள் தங்களின் திறமைகளை பயன்படுத்தி அரசிற்கும், மருத்துவர்களுக்கும் பயன்படும் வகையில் பல அறிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர். இதே போல் மதுரை பொறியாளர் ஆர்.சுந்தரேஸ்வரன் என்பவரும் இ-சானிடைசர் என்னும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.
மதுரை அய்யர் பங்களா பகுதியில் வசித்து வரும் ஆர்.சுந்தரேஸ்வரன் என்பவர் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிகிறார். தற்போது வீட்டிலேயே முடங்கிய நேரத்தில் மக்களுக்கு பயன்படும் விதமாக ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இன்றைய ஊரடங்கு சூழலில் மக்கள் அனைவரும் அத்யாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வீட்டில் இருந்து வெளியே செல்கின்றனர். அப்போது அவர்கள் வாங்கி வரும் பொருட்களிலும் கொரோனா வைரஸ் இருக்க வாய்ப்புள்ளது. இதனை தடுக்க வகையில் ஆர்.சுந்தரேஸ்வரன் சி-ரே (C-ray) கதிர்வீச்சை கொண்டு‘இசட் பாக்ஸ்’ என்ற இ- சானிடைசர் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இந்த இ- சானிடைசர் பாக்ஸில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களையும் வைக்கலாம். அந்த பொருட்களில் ஏதேனும் கிருமிகள் இருந்தால் சுமார் 20 நிமிடங்களில் பொருளில் இருக்கும் 'கொரோனா’ வைரஸ் உள்ளிட்ட எல்லா கிருமிகளையும் இந்த கருவி அழித்துவிடும். இதில் நாம் கடைகளில் இருந்து வாங்கிவரும் மளிகைப்பொருட்கள், பால், காய்கறி ஆகியவற்றையும், ரூபாய் நோட்டு, சில்லறை காசுகளையும் இந்த ‘இசட் பாக்ஸ்’ என்ற இ- சானிடைசரில் வைத்து கிருமி நீக்கியபின் நாம் பயன்படுத்தலாம்.
'இசட் பாக்ஸ்' எலக்ட்ரானிக் இ- சானிடைசர் பெட்டிக்குள் உருவாக்கப்படும் சிரே கதிர்வீச்சானது பாக்ஸில் வைக்கப்படும் பொருட்களில் இருக்கும் கிருமிகளை 20 நிமிடங்களில் அழித்துவிடும். அதுபோல், கத்தி, கரண்டி, சாப்பாடு பார்சல், பைக், கார் சாவிகளையும், அன்றாடம் பயன்படுத்தும் முககவசங்களையும், கையுறைகளை இந்த பாக்ஸ்சில் போட்டால் அதில் ஓட்டியிருக்கும் கிருமிகள் அழித்தபின் இந்த பொருட்களை நாம் மறுபடியும் பயன்படுத்த முடியும்.
இதுபற்றி கூறிய ஆர்.சுந்தரேஸ்வரன், தென்கொரியா, ஐரோப்பா நாடுகளில் மக்கள் இதே போன்ற எலக்ட்ரானிக்ஸ் சானிடைசர் கருவிகளை பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கருவியை தயாரிக்க வெறும் 5000 ரூபாய் தான் ஆனது எனவும், இந்த கருவியில் பயன்படுத்தும் உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே எளிதாக கிடைக்கின்றன எனவும் கூறியுள்ளார். இந்த 'இசட் பாக்ஸ்' எலக்ட்ரானிக் இ- சானிடைசர் எல்லா வகையான கிருமிகளை கடைசி வரை கொல்லக்கூடிய பாக்ஸ் என்பதால் இதற்கு 'இசட்' பாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்
இந்தியாவில் முதன்முதலில் இவர் கண்டுபிடித்த இந்த எலக்ட்ரனிக் இ- சானிடைசர் பாக்ஸில் பயன்படுத்தும் சிரே (C-ray) கதிர் சூரிய ஒளியில் 0.001 சதவீதம் உள்ளது. ஆனால், இவர் ஒரு எலக்ட்ரிக்கல் சர்கியூட்டை வைத்து, 'இசட் பாக்ஸ்' கருவிக்குள் இந்த சிரே கதிர் உருவாக்கி உள்ளதாகவும், இந்த மாதிரியை அவர் வேலை செய்யும் அலுவலகத்தில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை முறையில் பயன்படுத்த பலமுறை நிரூபித்துள்ளதாகவும் கூறினார்.
இந்த தமிழக அரசு உதவி செய்தால் இதனை ஒரு சேவையாக கருதி பொது மக்களுக்கு தேவையான இந்த இ சானிடைசர் 'இசட் பாக்ஸ்' கருவியை உருவாக்கி கொடுக்க ஆர்வமாக உள்ளதாகவும் கூறியுள்ளார் சுந்தரேஸ்வரன்.
