'என்ன நடக்குமோ'...'நைட் வெளிய வர பயமா இருக்கு'...அச்சத்தில் 'பெருங்களத்தூர்' பகுதி மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 18, 2019 10:16 AM

பெருங்களத்தூர் அருகே ஏரியில் உள்ள முதலைகளால், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளார்கள்.

Crocodiles Spotted in Sadanandapuram lake in Perungalathur

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே உள்ள சதானந்தபுரத்தில் மிகப்பெரிய அளவிலான ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஏரியில் பல வருடங்களாக முதலைகள் வசித்து வருகின்றன. இதனால் அச்சமடைந்த அந்த பகுதி மக்கள், முதலைகளை ஏரியில் இருந்து பிடிக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் முறையிட்டார்கள். ஆனால் அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பெய்த மழை காரணமாக ஏரியில் தண்ணீர் பெருகியுள்ளது. இதனால் முதலைகள் வழக்கம்போல் ஏரியின் நடுவே உள்ள திட்டு பகுதியில் மதிய நேரத்தில் வந்து உறங்குகிறது. மேலும் இரவு நேரங்களில் ஏரியின் அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து அங்கு வீடுகளில் உள்ள கோழி, வாத்து, நாய் உள்ளிட்டவைகளை வேட்டையாடி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சிறுவர்கள், பெரியவர்கள் என யாரும் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து  சில வருடங்களுக்கு முன்பு வெளியேறிய முதலை குட்டிகள், சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதியில் உள்ள ஏரிகளில் தஞ்சமடைந்தன. அவை தற்போது வளர்த்து, ஒவ்வொன்றும் சுமார் 5 முதல் 6 அடிக்கு மேல் இருக்கும். ஏரியில் குறைந்தது 6 முதலைகளுக்கு மேல் உள்ளன. அவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுப்பதுடன், வீடுகளில் உள்ள கால்நடைகளை குறிவைத்து தாக்குகின்றன. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீடுகளில் இருந்து வெளியே வர  அச்சப்படுவதுடன், உயிர் பயத்தில் நடுங்கியபடி வசித்து வருகின்றனர்.

எனவே பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு முதலைகளை பிடித்து செல்ல வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்''. பகலில் மணல் திட்டுகளில் முதலைகள் படுத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி காண்போரை திகிலடைய செய்துள்ளது.

Tags : #CROCODILE #SADANANDAPURAM LAKE #PERUNGALATHUR #TAMBARAM #CHENNAI