'1/2 கிலோ வெங்காயத்தை கொடுத்தா'.. '1 ஃபுல் பிரியாணி.. சென்னை ஹோட்டலின் வேறலெவல் ஆஃபர்!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 13, 2019 07:09 PM
அரை கிலோ வெங்காயம் கொடுத்தால் ஒரு பிரியாணியை வழங்கி வருகிறது ஏ.பி. புட் பாரடைஸ் என்கிற உணவகம்.
நாடு முழுவதும் குடியுரிமை மசோதாவுக்கு அடுத்தபடியான ஹாட் தலைப்பாக வெங்காய விலை உயர்வுதான் இருக்கிறது. பலர் திருமணங்களுக்கு செல்லும்போது மணமக்களுக்கு பரிசாக வெங்காயத்தை வழங்கி சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர் என்றால், இன்னொருபுறம் வெங்காயத்தை சாப்பிடாத சைவ அமைச்சர்கள் பலரும் அதுபற்றி கருத்து கூற மறுக்கின்றனர்.
உள் தமிழகத்தில் எகிப்து வெங்காயம் விநியோகிக்கப்பட்டாலும், பார்ப்பதற்கு பீட்ரூட் மாதிரி இருக்கும் அந்த வெங்காயத்தை வாங்க பலரும் யோசித்தபடியே இருக்கின்றனர். இந்நிலையில் சென்னை தரமணி அடுத்த கந்தன்சாவடியில் எம்.ஜி.ஆர் சாலையில் உள்ள ஓ.எம்.ஆர் புட் ஸ்ட்ரீட் வளாகத்தில் உள்ள ஏ.பி புட் பாரடைஸ் உணவகம் 1/2 கிலோ வெங்காயத்துக்கு ஒரு முழு பிரியாணியை வழங்குவதால், பலரும் இங்கு சென்று பிரியாணி சாப்பிட்டுவிட்டு வெங்காயத்தை ஈடாக தருகின்றனர்.
இதுபற்றி பேசிய திவ்யா என்ற ஐடி ஊழியர் இப்படி ஒரு சலுகை பற்றி கேள்விப் பட்டதும், தன்னுடன் பணிபுரியும் சக தோழிகளிடமும் கூறி அவர்களையும் வெங்காயம் எடுத்துவர சொல்லி, இந்த உணவகத்துக்கு சென்று தரமான பிரியாணியை உண்டதாக கூறியுள்ளார்.
இதுபற்றி பேசிய கடை உரிமையாளர், மன்னர் காலத்தில் இருந்த பண்டமாற்றுமுறை போல் தங்களுக்கு வெங்காயத்தின் தேவை இருப்பதாலும், ஊருக்குள் வெங்காய தட்டுப்பாடு இருப்பதாலும் இப்படி 1/2 கிலோ வெங்காயத்தை கஸ்டமரிடம் இருந்தே பெற்றுக்கொண்டு ஒரு பிரியாணியை வழங்கும் சலுகையை தங்களின் உணவகத்தில் அறிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வெங்காய விலை குறைந்து வரும் நிலையில் இந்த சலுகை நிறுத்தப்படும் என்றும், அதே சமயம் எப்போது இப்படியான தட்டுப்பாடுகள் வருகிறதோ அப்போது இந்த சலுகைகள் மீண்டும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.