‘காய்ச்சல், இருமல் இருக்கானு’... ‘கொரோனா ஆய்வுக்கு சென்ற சுகாதார ஊழியர்களுக்கு’... ‘வாணியம்பாடி மக்களால் நடந்த பரபரப்பு’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்களை, சி.ஏ.ஏ. கணக்கெடுப்புக்கு வந்ததாகக் கூறி சிறைப்பிடித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி பகுதியில் இருந்து தப்லீக் ஜமாத் மாநாட்டிற்காக டெல்லிக்கு சென்று வந்த எட்டு பேரை தனிமைப்படுத்தி அவர்களுடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வாணியம்பாடி பகுதியில், காய்ச்சல், இருமல் என்று பாதிக்கப்பட்டு யாரேனும் உள்ளார்களா என்று இன்று காலை முதல் வீடுவீடாக சென்று சுகாதாரத் துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர்.
இப்பணிகளில் சுகாதாரத்துறை, தூய்மைப் பணியாளர்கள், வருவாய் துறையினர் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 75 குழுக்களாக பிரிந்து நகரம் முழுவதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி பஷீராபாத் பகுதிக்கு சென்ற கணக்கெடுப்பு பணியாளர்களை, அப்பகுதியில் உள்ளவர்கள், அவர்களுடைய கணக்கெடுப்பு சீட்டை எடுத்து கிழித்துப் போட்டு அவர்களுடைய ஐடி கார்டுகளை பறித்து சிறை பிடித்தனர்.
மேலும், இந்தப் பகுதியில், சி.ஏ.ஏ. கணக்கெடுப்புக்கு வருவதாக சமூகவலைத்தளம் மூலம் வதந்தி பரவியதாகக் கூறப்படுகிறது. சுகாதாரத் துறை பணியாளர்கள் சிறை பிடிப்பு குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினரையும் அப்பகுதியினர் சிறை பிடித்ததை அடுத்து, இது தொடர்பாக தகவலறிந்து சென்ற வாணியம்பாடி காவல்துறையினர் கணக்கெடுப்பு பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினரை அவர்களிடம் இருந்து மீட்டனர்.
பின்னர் அப்பகுதியில் பிரச்சினையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரச்சனை செய்து தப்பி ஓடிய பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
