'எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க'... 'ராக்கெட் வேகத்தில் புக் ஆகும் டிக்கெட்'... குழப்பத்தில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 07, 2020 09:30 AM

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது 14ம் தேதியுடன் முடிவுக்கு வருமா என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், தமிழகத்தில் ரயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு குவிந்து வருகிறது.

Post lockdown bookings are filling very fast in Trains and Bus

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கவும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியது. இதையடுத்து அரசின் அறிவிப்பு வெளிவந்த உடனே சென்னையில் தங்கியிருந்த மக்கள் அனைவரும், பேருந்து, ரயில்களில் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இன்னும் சிலர் பேருந்து மற்றும் ரயில் கிடைக்காமல் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் சென்னையிலேயே இருந்துகொண்டு, ஊரடங்கு எப்போது முடியும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில், அன்றுடன் ஊரடங்கு முடியுமா அல்லது தொடருமா என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இருப்பினும் ஏப்ரல் 15-ந்தேதி சொந்த ஊர்களிலிருந்து திரும்பி சென்னை வருவதற்காக, ரயில்கள், பேருந்துகளில் அதிகளவில் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையே இந்த ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கு முன்பாக 3 நாட்கள் ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் பல்வேறு தகவல்கள் உலவுகின்றன.

அவ்வாறு ஏதாவது உத்தரவு வரும்பட்சத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிக்கித் தவிக்கும் பலர், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட வேண்டும் என்பதற்காக ரயில், பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். ஒரு வேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, 15-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அல்லது ஊரடங்கு 14-தேதிக்குப் பிறகு முடிவுக்கு வந்தாலும், பொதுமக்கள் பயணம் செய்ய அரசு சிறப்புப் பேருந்துகளை ஏற்பாடு செய்யுமா என்பதும் பலரது கேள்வியாக உள்ளது.

இதனிடையே அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதனைச் சற்று விரைவாக அறிவித்தால், பொதுமக்கள் தங்களின் பயணத் திட்டத்தினை பிளான் செய்ய ஏதுவாக இருக்கும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே டிக்கெட் முன்பதிவு 15-ந்தேதி மட்டும் அல்லாமல் 16, 17-தேதிகளிலும் குவிந்து வருகிறது.