"எங்க இந்து சகோதர்களின் திருவிழாவுல கலந்துக்குறோம்".. அம்மன் கோவில் விழாவுக்கு முஸ்லீம் மக்களுக்கு அழைப்பு விடுத்த இந்து மக்கள்.. பெரம்பலூரில் நெகிழ்ச்சி.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெரம்பலூரில் இந்து மக்கள் விடுத்த அழைப்பின்பேரில் அம்மன் கோவில் திருவிழாவில் முஸ்லீம் மக்கள் திரளாக கலந்துகொண்டது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் கிராமத்தில் அமைத்துள்ளது செல்லியம்மன் ஆலயம். இந்த கோவிலில் பல ஆண்டுகளாக ஆடி மாதத்தில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனிடையே 1990 களில் கோவில் திருவிழாவில் சிக்கல்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் வழக்கம்போல திருவிழாவை நடத்த அனுமதி அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளூர் இந்து மக்கள் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் திருவிழா நடைபெற்று வந்தது.
சமரசம்
இந்நிலையில், 3 நாட்கள் நடைபெறும் செல்லியம்மன் கோவில் திருவிழா கடந்த சனிக்கிழமை துவங்கியது. இதில், பங்கேற்க உள்ளூர் முஸ்லீம் மக்களுக்கு இந்துக்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனை ஏற்று முஸ்லிம்கள் இந்த திருவிழாவில் கலந்துகொண்டனர். ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற தொடக்க விழாவில், காவல்துறைக் கண்காணிப்பாளர் எஸ்.மணி, மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா, மற்றும் மக்கள் முன்னிலையில் இந்து - முஸ்லீம் மக்கள் கைகுலுக்கி ஒருவரை ஒருவர் வாழ்த்தினர்.
அதனை தொடர்ந்து செல்லியம்மன் கோவில் தேரை இரு சமூக மக்களும் வடம் பிடித்து இழுத்தனர். இது ஊரார் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.
சந்தனக்கூடு
முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் முஸ்லிம் சமூகத்தினர் வி.களத்தூரில் உள்ள இந்துக்களை ரம்ஜான் மற்றும் உள்ளூர் தர்காவின் ‘சந்தனக்கூடு’ தேர் திருவிழாவின் போது இப்தார் விருந்துக்கு அழைத்திருந்தனர். இந்த நட்புச் செயலால் உற்சாகமடைந்த இந்துக்கள் செல்லியம்மன் கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள இஸ்லாமியர்களை அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய வி.களத்தூர் ஜமாத்தை சேர்ந்த எம்.ரஃபியுதீன், "எங்களுடைய கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, பழைய பதட்டங்களை மறந்து புதிதாக நட்பை தொடங்க வேண்டும் என்று நினைத்தோம். எனவே எங்கள் இந்து சகோதரர்கள் எங்களை அழைத்ததால், செல்லியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள முடிவு செய்தோம்" என்றார்.

மற்ற செய்திகள்
