இன்று கொண்டாடப்படும் மஹாசிவராத்திரி.. அப்படி என்ன ஸ்பெஷல் இந்த நாளில்..?
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்இந்து சமய மக்களின் முக்கிய தினங்களில் ஒன்றான மஹா சிவராத்திரி விரதம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. தீய எண்ணங்களை அழித்து நம்முடைய உடலையும் மனதையும் நல்வழிப்படுத்திட இத்தகைய விரதங்கள் முக்கியமானவை என்கிறார்கள் முன்னோர்கள். அந்த வகையில், இன்று கொண்டாடப்பட இருக்கும் மஹா சிவராத்திரி விரதத்தின் போது சிவ நாமத்தை உச்சரித்து அக இருளை நீக்கி மனத்திற்குள் புது ஒளியை தூண்ட செய்ய வேண்டும்.

மஹாசிவராத்திரி
பிரளய காலத்தில் பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டன. இதனை அடுத்து கவலை கொண்ட பார்வதி தேவி மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் சிவ பெருமானை மனமுருகி வேண்டினார். இரவு முழுவதும் கண் விழித்து ஆகம விதிகளின்படி நான்கு கால பூஜைகள் செய்தார் அம்பிகை. அதன் காரணமாகவே அந்த நாளை மஹா சிவராத்திரியாக முன்னோர்கள் வழிபட்டு வந்தனர்.
மேலும், தனது நெக்குருகும் பிரார்த்தனையின் போது, சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல், மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அனைத்து வகையான பாக்கியங்களையும் வழங்கி முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என சிவ பெருமானிடம் அம்பிகை வேண்டிக்கொண்டார்.
அம்பிகை சிவ பெருமானை வழிபட்ட நாளில் அவரை போலவே சிவனை வணங்கினால் நல்வாழ்வு கிட்டும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
மஹா சிவராத்திரிக்கு சில தினங்களுக்கு முன்பே அதற்காக நம்முடைய உடலையும் மனதையும் தயார் செய்தல் வேண்டும். குறிப்பாக, மஹா சிவராத்திரி விரத நாட்கள் நெருங்கிய உடனேயே அசைவ உணவுகளை தவிர்த்தல் வேண்டும். தேவையற்ற உடல் அசவுகரியங்களை இது தடுக்கும்.
சிவ ராத்திரி அன்று குளிர்ந்த நீரில் நீராடி, அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு மக்கள் செல்வர். அதேபோல, அன்றைய இரவு நடைபெறும் நான்கு கால பூஜையில் கலந்துகொண்டு சிவ பெருமானை மனத்தால் தொழுவர். இரவு வேளைகளில் கண் விழித்து இருக்கும்போது தேவாரம், திருவாசகம் போன்ற சிவ ஞான செல்வர்கள் அருளிய பாசுரங்களை மனதிற்குள் பாடி பரவசமடைவர்.
ஈஷாவில்..
கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் மஹா சிவராத்திரி விழாவிற்கு ஈஷா தயாராகி வருகிறது. இந்நிலையில், இன்று சத்குருவால் சக்தியூட்டப்பட்டதாக சொல்லப்படும் ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன .
தமிழக அரசு நடத்தும் விழா
மஹா சிவராத்திரியை முன்னிட்டு முதன் முறையாக சென்னையின் ராம கிருஷ்ண மடம் அருகேயுள்ள மைதானத்தில் பெரும் விழா ஒன்றினை நடத்த திட்டமிட்டிருக்கிறது தமிழக அரசு. இந்த விழாவில் சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மஹா சிவராத்திரி அன்று மயிலாப்பூரில் அமைந்துள்ள ஏழு சிவாலயங்களுக்கு மக்கள் திரளாக செல்வது வழக்கம். இம்முறை இங்கே வரும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தீர்த்தம் கொண்டவரப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனவும்,தமிழகத்தின் முக்கிய கோவில்களில் இருந்து பிரசாதம் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்படும் என தமிழக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
