மழையால் நடந்த விபரீதம்.. திடீரென சரிந்து விழுந்த கோயில் தேர்.. திருவிழாவில் அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவிழாவின் போது மழை பெய்ததால் சாலையில் வழுக்கி தேர் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையில் அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் மயான கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம். இதனைத் தொடர்ந்து மாசி தேரோட்டமும் நடந்து வருகிறது.
மார்ச் மாதம் 2-ம் தேதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். காலை 10:30 மணிக்கு திருத்தேரில் அம்மன் சிலை வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. இதனை அடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் புறப்பட்டு பூசாரி தெரு, கடைவீதி, சிவன் கோவில் தெரு, சேலம் சாலை, ஆரம்ப சுகாதார நிலையம் சாலை ஆகியவற்றின் வழியாக வந்து மேலப்பாளையம் சாலை அருகே சென்றது. அப்போது திடீரென லேசாக மழை பெய்தது. இதனால் தேர் வழுக்கி கீழே விழுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், உடனே ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து, தேர் மீண்டும் தூக்கி சீர்செய்யப்பட்டு கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் தேரில் இருந்த பூசாரி சுந்தரம் என்பவர், லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தேரோட்டத்தின்போது திருத்தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
