'சென்னைக்கு முதலிடம்'...'ஆபாச படம் பாக்குறவங்க லிஸ்ட் ரெடி'...'ஐபி அட்ரஸ் வந்தாச்சு'...அதிரடி நடவடிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 30, 2019 03:52 PM

உலகிலேயே குழந்தைகளின் ஆபாச படத்தை பார்க்கும் நகரம் சென்னை என்ற அதிரவைக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Chennai Tops Globally in Child Pornography Viewers, Says Report

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளை வைத்து எடுக்கபடும் ஆபாச வீடியோகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.க்கு, குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் குவிந்தன. இதையடுத்து ஆய்வில் இறங்கிய அந்த அமைப்பு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

எஃப்.பி.ஐ அளித்துள்ள தகவலின் அடிப்படையில் குழந்தைகளின் ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் நாடு இந்தியா என்றும், அதிலும் குறிப்பாக சென்னைக்கு முதலிடம் என கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த அறிக்கையை அமெரிக்க புலனாய்வு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி  இந்த தகவலின் அடிப்படையில் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை  அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழகத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் ஏடிஜிபி ரவி, ''குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் ஆபாச படங்களை பார்ப்பதோ அல்லது பதிவிறக்கம் செய்வதோ சட்டப்படி குற்றம். மேலும் அதுபோன்ற படங்களை லேப்டாப் அல்லது மொபைல் போனில் வைத்திருப்பதும் குற்றமாகும். குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பதில் சென்னை முதல் இடத்தில இருப்பது மிகவும் வேதனைக்கு உரிய விஷயம் ஆகும்.

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்போரின் ஐபி முகவரி மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் தமிழக காவல்துறைக்கு வந்துள்ளது. எனவே குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்போர் விரைவில் கைது செய்யப்படுவார்கள். மேலும் குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் கார்ட்டூன் போன்றவற்றை வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பரப்பினால், அதனுடைய அட்மின் கைது செய்யப்படுவார்'' என ஏடிஜிபி ரவி கூறியுள்ளார்.

மேலும் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் அதனை ஷேர் செய்வோர் குறித்த தகவல்களை 155260 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த செயலில் ஈடுபடுவோருக்கு, 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags : #TAMILNADUPOLICE #CHENNAI #PORN #CHILD PORNOGRAPHY #MINISTRY OF HOME #FBI