‘அம்மாவைக் கூட மம்மினு தான் சொல்றீங்க’.. ‘உலக தமிழ் கலைஞர் மாநாடு’.. ‘டீசர் வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் ஆதங்கம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 27, 2019 06:02 PM

அகில உலக கலைஞர் சங்கம் நடத்தும் உலக தமிழ் கலைஞர் மாநாட்டின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

Chennai teaser release of world tamil artists conference

உலகளாவிய ரீதியில்  தமிழ் கலைஞர்களுக்கென்று  உருவாக்கப்பட்ட அகில உலக கலைஞர் சங்கம் 2020ம் ஆண்டு முதல்முறையாக உலக கலைஞர் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த இருக்கிறது. இந்த மாநாட்டில் தமிழ் பாரம்பரியக் கலைகளை மையப்படுத்திய ஆய்வோடு, கலைஞர்கள் கௌரவிப்பு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் இடம்பெற உள்ளது. மாநாடு நடைபெறும் காலம், நேரம் ஆகியவை தமிழர் திருநாளாகிய தைத்திருநாளன்று மதியம் 12 மணிக்கு World1 fm வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக கலைஞர் மாநாட்டின் டீசர் வெளியீட்டு விழா கடந்த ஞாயிறன்று (25.08.2019) சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முனைவர் சி.இராஜமாணிக்கம், பொறியியலாளர் மகிபா தேவன், முனைவர் கிருதியா, DR.சீர்காழி சிவசிதம்பரம், முனைவர் பழனி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும்  இந்த விழாவில் கவிஞர் கபிலன், பிரபல பாடகர் வேல்முருகன் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய முனைவர் சி.இராஜமாணிக்கம் பேசும்போது, “இந்த உலக தமிழ் கலைஞர் மாநாட்டை நடத்துவதற்கான அவசியம் என்ன எனக் கேட்டால் நம்மூரில் பறையடித்தால் இழிவு என சொல்கிறோம். ஆனால், வெளிநாடு வாழ் தமிழர்கள் அங்கு பறையடிப்போர் சங்கத்தை நிறுவி பறையடிக்கிறார்கள். நம்மூரில் குச்சி வைத்து விளையாடினால் முரட்டுப் பையன் என பெண் தர மறுக்கிறார்கள். ஆனால் அங்கு சிலம்பம் பயில்கிறார்கள். மதம், சாதி கடந்து அங்கு ஆண்கள், பெண்கள் பட்டாடை உடுத்தி கும்மியடிக்கிறார்கள். ஆனால் நம் வீடுகளில் குழந்தைகளுக்குக் கூட தமிழ்ப்பெயர் இல்லை. பெற்றோரை தமிழ்க் குடும்பங்களில் அப்பா, அம்மா எனக் கூடக் கூப்பிடுவதில்லை. இங்கு ஆங்கிலம் பேசுபவர்களுக்கே மரியாதை, தமிழில் பேசுபவர்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ் இலக்கியம், கலைகளை வளர்க்க வேண்டுமென இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளனர். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நாம் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

பின்னர் பேசிய கவிஞர், திரைப்பாடலாசிரியர் கபிலன், “தமிழ் மந்திர மொழியல்ல, அகில உலகின் ஆதி மொழி. தொல்காப்பியத்தால் வடிகட்டிய தூய மொழி. வள்ளுவனின் எழுத்தாணி போல் கூர்மையான மொழி. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு தந்த எதுகை, மோனை மொழி. அணில், ஆடு, இலை பேசும் அன்பின்  மொழி” என தமிழ் மொழியின் பெருமைகளைக் கூறியுள்ளார்.

Tags : #WORLDTAMILARTISTSCONFERENCE #CHENNAI #TEASER #RELEASE #FUNCTION