'நீங்க விரும்பி சாப்பிடுற 'நொறுக்கு தீனியா'?...'சென்னையில் குப்பைக்கு போன ஸ்னாக்ஸ்'... அதிரவைக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Aug 24, 2019 10:44 AM
சென்னை அம்பத்தூர் அருகே 3 டன் எடையுள்ள நொறுக்குத்தீனி பாக்கெட்டுக்கள் சாலையோர குப்பைக் கிடங்கில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலத்தில் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் நொறுக்கு தீனிகளையே, அதிகமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் வாங்கி உண்கிறார்கள். அதில் இருக்கும் நச்சு தன்மையை அறிந்தே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பது தான் பெரிய வேதனை. இந்த நொறுக்கு தீனிகள் கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனங்களைக் கலந்து பல வண்ணமயமான பாக்கெட்டுகளில் அடைத்து சிறிய கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் அம்பத்தூர் அருகே நொளம்பூரில் சாலையோர குப்பைக் கிடங்கில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள சர்வீஸ் சாலையில், உள்ள குப்பைக் கிடங்கு ஒன்றில் பட்டப்பகலில் 3 டன் எடை கொண்ட நொறுக்குத் தீனி பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு கிடந்தன. உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தற்போது பல இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறார்கள். இதனால் 6 மாதங்கள் மட்டுமே உண்பதற்குத் தகுதியானவை என்று பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்ட நிலையில், அவற்றை ஒரு வருடத்திற்கும் மேலாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து காலாவதியான நொறுக்கு தீனி பாக்கெட்களை குப்பையில் கொட்டியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த நொளம்பூர் காவல்துறையினர், காலாவதியான உணவு பாக்கெட்டுகளைத் தீயிட்டு அழித்தனர். வேறு யாரேனும் இதனை எடுத்துச்சென்று காலாவதி தேதியை அழித்து கடைகளில் விற்றுவிடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதுபோன்ற நொறுக்குத் தீனிகளை தொடர்ந்து உண்பதால் குழந்தைகளுக்கு உடல் பருமன், அஜீரணம், வயிற்றுக் கோளாறு, ரத்தத்தில் கொழுப்பு சேர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவார்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.