‘நடத்தலாமா வேணாமா? ரசிகர்கள் வருவாங்களா வரமாட்டாங்களா?’.. கொரோனாவால் கூடி விவாதிக்கும் ஐபிஎல் ஆட்சிமன்ற குழு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13ஆவது ஐபிஎல் டி20 தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக இந்த போட்டித் தொடர் நடப்பது குறித்த ஆலோசனைக்கான ஐபிஎல் ஆட்சிமன்ற குழு வரும் சனிக்கிழமை கூடி விவாதிக்க உள்ளது.
இந்தியா முழுவதும் 9 மாநிலங்களில் நடக்கவுள்ள 60 ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பும் ஒட்டுமொத்த நிகழ்வுகளின் வர்த்தக நலன்களும் தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தலை விட வணிக நலன்கள் மேலோங்குமா என்பதுதான் சனிக்கிழமை கூட்டத்தில் தெரிய வரப்போகிற முடிவாக இருக்கும்.
முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் பிரிஜேஷ் படேல் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். எனவே மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து இன்ன பிற மாநிலங்களும் ஐபிஎல்க்கு எதிராக போர்க்கொடி உயர்த்தக் கூடிய நிலை உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல், காலியாக இருந்தால், அந்த சூழ்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுமா என்பதுதான் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கான விடை சனிக்கிழமை தெரிந்துவிடும்.