'தமிழகத்தில் மருத்துவர்களையும் விட்டுவைக்காத கொரோனா'... 'மனைவிக்கும் பரவிய சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவிற்கு எதிராக மருத்துவர்கள் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், கொரோனா தொற்றினால் அவர்களும் பாதிக்கப்ட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மருத்துவர்கள், மற்றும் மருத்துவ துறையை சேர்ந்த பணியாளர்கள் இரவும், பகலுமாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில் எட்டு மருத்துவர்கள்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஐந்து மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அதேபோன்று தூத்துக்குடியில் உள்ள மருத்துவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டெல்லி சென்று வந்ததால், அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் மருத்துவராக பணியாற்றும் அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை அண்ணா நகரில் இயற்கை மருத்துவராக பணிபுரிந்த ஒருவருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஈரோடு ரயில்வே மருத்துவமனை மருத்துவருக்கு, தாய்லாந்து நாட்டவருடன் தொடர்பில் இருந்த முதியவருக்கு சிகிச்சை அளித்த போது தொற்று ஏற்பட்டது. கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது குணமடைந்துள்ளார்.