'இன்ஜினியரிங் முடிச்சவங்க தான் மேக்சிமம் அந்த வேலை பாக்குறாங்க...' 'இந்த நிலைமைல அரியர் ஸ்டூடண்ட்ஸ பாஸ் பண்ணி விடலாமா...' - நீதிபதிகள் வேதனை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியர் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்த அறிவிப்பில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பொறியியல் படித்து அரியர் தேர்வுக்கான பணம் செலுத்திய மாணவர்களின் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தற்போது தேர்வு பணிகள் ஏதும் நடத்த முடியாத காரணத்தால் தமிழக அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு தவிர பிற பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பிற்கு எதிராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே தனியார் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களில் பெருமளவு பொறியியல் படித்தவர்களே பணியாற்றுவது குறித்த செய்திக்காக நீதிபதிகள் தங்களின் வேதனையை தெரிவித்தனர்.
இவ்வாறு இருக்கும் இந்த சூழலில் அரியர் மாணவர்கள் தேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சி பெற முடியும் என எதிர்பார்க்கலாம் எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் வரும் நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிட்டுள்ளனர்.