'டிக்-டாக்' செயலி மீதான தடை .. நிபந்தனைகள் விதித்த நீதிமன்றம்.. மீண்டும் 'டிக் டாக்' பதிவிறக்கம்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Apr 25, 2019 11:08 AM
சில நிபந்தனைகளுடன் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கி, பதிவிறக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

டிக் டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால், பல்வேறு சமூகப் பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறி, அந்தச் செயலிக்கு தடைவிதிக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை ஏப்ரல் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதனையடுத்து டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்து, அந்நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், டிக் டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்தது. மேலும் டிக் டாக் செயலியை இந்தியாவில் நீக்குமாறு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்ததுடன், வழக்கை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதையடுத்து டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம் தத்தமது ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியது.
இந்நிலையில் ஏப்ரல் 22-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை ஏப்ரல் 24-ம் தேதி விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் டிக் டாக் மீதான தடை தளர்ந்ததாகக் கருதப்படும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. அதன்படி ஏப்ரல் 24-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை விசாரித்தது.
அப்போது டிக் டாக் சார்பில், ‘உயர் நீதிமன்றத்தின் தடைக்குப் பிறகு, டிக் டாக் செயலியில் இருந்து விதிமீறல்கள் உள்ள 6 மில்லியன் வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. 18 வயதுக்கு குறைந்தவர்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது. பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது. ஆபாச வீடியோக்களை பதிவேற்றினால் டிக் டாக் செயலி தானாக செயலிழந்துவிடும்’ என்று உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதனையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள், ‘சிறுவர், சிறுமியர், பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. டிக் டாக் நிறுவனம் கொடுத்த வாக்குறுதியை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும். சமூக சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது’ என்று நிபந்தனையுடன் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
தடை நீக்கப்பட்டதையடுத்து விரைவில் இந்தியாவில் டிக் டாக் செயலி ப்ளே ஸ்டோரிலிருந்து, தரவிறக்கம் செய்யப்படும் வசதியை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் கொண்டுவரும் என்று அதன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
